வாசகர்கள் கருத்துகள் ( 1 )
என்ன திட்டமிட்டாலும் கும்பலை கட்டுப் படுத்த முடியாது.
திருப்பூர்:திருப்பூர், குமரன் ரோட்டின் குறுக்கே சுரங்கப்பாலம் பணி மேற்கொள்வதற்காக, செயல்படுத்தப்பட்ட போக்குவரத்து மாற்றம், கேலிக்கூத்தாக முடிந்தது. போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்த முடியாத அளவு சென்றதால், ஒரே நாளில், போக்குவரத்து மாற்றம் ரத்தானது. நடராஜா தியேட்டர் புதிய பாலம் திறக்கப்படாமலும், மாற்றுப் பாதைகள் சரிசெய்யப்படாமலும், அமல்படுத்தப்பட்டதால், பொதுமக்கள் தவித்தனர்; இது பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. போக்குவரத்து ஸ்தம்பிப்பு திருப்பூரில், பார்க் ரோட்டையும், யுனிவர்சல் ரோட்டையும் இணைக்கும் வகையில், சுரங்கப்பாலம் பணி தீவிரமாக நடக்கிறது. குமரன் ரோட்டின் குறுக்கே, இப்பணியை மேற்கொள்வதற்காக, நேற்று முன்தினம் போலீசார் போக்குவரத்து மாற்றத்தை அமல்படுத்தினர். இதனால், குமரன் ரோடு, மங்கலம் ரோடு, நடராஜ் தியேட்டர் ரோடு என, அனைத்து பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மீண்டும் பழைய முறை ஆய்வு செய்த, போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், மங்கலம் ரோட்டில் நெரிசல் ஏற்படுவதை அறிந்தார். அந்த ரோட்டில் பழைய முறைப்படி மாற்றம் செய்யப்பட்டது. அதன்பின், குமரன் ரோட்டில் நெரிசல் நீடித்தது. குமரன் ரோடு செல்லும் கனரக வாகனங்கள், ஊத்துக்குளி ரோடு வழியாக திருப்பி விடப்பட்டது. ஆனாலும், போக்குவரத்து மாற்றம் பலனளிக்காததால், இரவு முதல் பழைய முறைப்படியே போக்குவரத்து மாற்றத்தை செய்தனர். கடந்த, 2023ல் நகர்புற உள் கட்டமைப்பு மற்றும் மேம்பாடு நிதியில் திருப்பூரில், நான்கு இடங்களில் புதிய பாலம் கட்டும் பணி துவங்கியது. நொய்யல் ஆற்றின் குறுக்கே, 18 கோடி ரூபாய் மதிப்பில் ஈஸ்வரன் கோவில் அருகிலும், 14 கோடி ரூபாய் மதிப்பில் நடராஜா தியேட்டர் அருகேயுள்ள பாலம் கட்டும் பணி நடந்தது. பாலம் திறப்பு தாமதம் நடராஜா தியேட்டர் பாலம் அனைத்து பணிகளும் முடிந்த பின், மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் சில மாதங்களாக கிடப்பில் போடப்பட்டது. சுரங்க பாலம் பணிக்காக போக்குவரத்து மாற்றத்தை மேற்கொள்ள போலீஸ் தரப்பில், அந்த பாலத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு கோரினர். மாநகராட்சி தரப்பில் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை. கடந்த மாதம் இதேபோன்று, ஒரு முறை போக்குவரத்து மாற்றம் குறித்து அறிவித்து கைவிடப்பட்டது. தற்போது, சுரங்கப்பாலம் பணி அடுத்த கட்டத்துக்கு சென்றதால், மாற்றம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நடராஜா தியேட்டர் பாலம் திறக்கப்படாமலேயே நேற்று முன்தினம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இது நெரிசல் ஏற்பட பிரதானக்காரணமாக அமைந்தது. நடராஜா தியேட்டர் ரோடு புதிய பாலம் இன்று திறப்பு போலீஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டதை தொடர்ந்து, நடராஜா தியேட்டர் ரோட்டில் உள்ள புதிய பாலம் இன்று மாலை திறக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது. அமைச்சர் சாமிநாதன் திறந்துவைக்கிறார். போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது: போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட காரணத்தால், போக்குவரத்து மாற்றத்தை ரத்து செய்தோம். நடராஜா தியேட்டர் ரோடு, மங்கலம் ரோடு இருவழிபாதையாக மாற்றம் செய்யப்பட உள்ளது. நடராஜா தியேட்டர் புதிய பாலம் திறப்புக்கு பின், மீண்டும் இந்த போக்குவரத்து மாற்றம் நாளை(4ம் தேதி) முதல் மீண்டும் செய்யப்பட உள்ளது. அனைத்து மாற்றமும் தொடர்ந்து கண்காணிக்கப்படும். பாலம் திறப்புக்கு பின், நெரிசல் ஏற்படாது. 'கருத்து சொல்ல முனைந்தோம் போனை எடுத்தால்தானே...' போக்குவரத்து மாற்றம் மேம்படுத்துதலில், பொதுமக்களுக்கு ஏதேனும் கருத்துகள் இருந்தால், 94981-81078 எண்ணுக்கு தொடர்பு கொண்டு கருத்துகளை தெரிவிக்கலாம் என்று போலீசார் அறிவித்திருந்தனர். மக்கள் தரப்பில் எவ்வித கருத்தும் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், பொதுமக்கள் தொடர்பு கொண்டபோதும், யாரும் போனை எடுக்கவில்லை என்பது தெரிந்தது. இதுகுறித்து போலீஸ் கமிஷனர் பார்வைக்கு கொண்டுவரப்பட்டது. நேற்று காலை முதல், இந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டவர்களை, போலீசார் அழைத்து, கருத்துகளை பெற்று வருகின்றனர். தனி நபர், அமைப்பு ரீதியாக அழைத்து கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இவை அனைத்தும் கமிஷனரிடம் உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மக்கள் என்ன சொல்கிறார்கள்? சுந்தரபாண்டியன், கே.செட்டிபாளையம்: சுரங்க பாலம் பணிக்காக போக்குவரத்து மாற்றத்தை போலீசார் மேற்கொள்கின்றனர். மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து மாநகராட்சி சந்திப்பு வழியாக ரயில்வே ஸ்டேஷன் செல்ல கூடிய டூவீலர், புதிய பாலம் வழியாக செல்லலாம். கார், பஸ் போன்ற வாகனங்கள், மாநகராட்சி சந்திப்பு, தாடிக்காரன் முக்கு வழியாக நடராஜ் தியேட்டர் ரோடு வழியாக செல்லலாம். தேவையான இடத்தில் தடுப்புகளை வைப்பது மட்டுமல்லாமல், போலீசாரையும் பணி அமர்த்த வேண்டும். குமரன் ரோட்டில் இருந்து பஸ் ஸ்டாண்ட் செல்ல கூடிய வாகனம், யுனிவர்சல் தியேட்டர் வழியாக 'யூ டர்ன்' போட்டு செல்லலாம். ஈஸ்வரன் கோவில் பாலத்தின் பணியை விரைந்து முடித்து திறக்க வேண்டும். சுரங்க பாலம் கட்டாமல், மேம்பாலங்களை கட்டலாம். பாலம் கட்டுகின்ற பெயரில் மக்கள் வரி பணத்தை வீணாக்க வேண்டாம். திட்டமிட்டு கட்ட வேண்டும். ஏற்கனவே கட்டப்பட்ட டி.எம்.எப்., சுரங்க பாலம், மழை காலங்களில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. நடராஜ், மங்கலம் ரோடு: திருப்பூர் மாநகராட்சியின் பின்பக்கம் இருக்கும் ஜம்மனை ஓடையில் மேற்கு பக்கம் அல்லது கிழக்குப் பக்கமாக புதிய நொய்யல் பாதைக்கு புதிய பாலம் அமைக்க வேண்டும். யுனிவர்சல் தியேட்டரையும் கஜலட்சுமி தியேட்டரையும் இணைக்கும் வகையில் ஒரு பாலம் அமைக்க வேண்டும். நஞ்சப்பா பள்ளி ரோட்டை மேற்கு செல்லும் ஒரு வழி பாதையாக மாற்றி டூவீலர் மற்றும் சிறிய ரக வாகனங்களை அதில் திருப்பிவிட வேண்டும். டவுன் ஹால் எதிரில் உள்ள மாநகராட்சி பூங்காவை அகற்றிவிட்டு அந்த இடத்தில் ரவுண்டானா அமைக்க வேண்டும். மேம்பாலம் செல்லும் வாகனங்கள் இப்படியே திரும்பி விடலாம். ஊத்துக்குளி ரோடு மற்றும் ரயில்வே ஸ்டேஷன், ராயபுரம் செல்லும் வாகனங்கள் மட்டும் நேராக செல்லலாம். இதன் மூலம் ரயில்வே ஸ்டேஷன் சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைத்து விடலாம். சுரங்க பால வேலைகள் நடக்கும் போது, மேம்பாலத்தில் இருந்து இறங்கும் சிறிய மற்றும் டூவீலர் வாகனங்களை ஊத்துக்குளி ரோடு கண்ணன் டிபார்ட்மென்ட் ஸ்டோர் வழியாக வாலிபாளையம் வழியாக மாற்றி விடலாம். குறிப்பாக, ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள, அனைத்து மின்கம்பத்தையும் உள்ளே தள்ளி அமைக்க வேண்டும். போக்குவரத்து உள்ள இடங்களில், தேவையில்லாமல் வாகனங்களை நிறுத்த அனுமதிக்க கூடாது. ரோட்டில் தள்ளுவண்டி கடைகள் உட்பட, எந்த வகையிலும, ஆக்கிரமிப்புகள் ஏற்படாத வகையில் தடுப்பு அமைக்க வேண்டும். இது போன்று,மாற்றங்களை செய்தால் நகருக்குள் கணிசமான போக்குவரத்து நெருக்கடிகளை குறைத்துவிடலாம். இதற்கு, மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
என்ன திட்டமிட்டாலும் கும்பலை கட்டுப் படுத்த முடியாது.