நாள்தோறும் நுாறு டன் கொப்பரை தேவை! கேராபெட் அதிகாரிகள் தகவல்
உடுமலை: நாள்தோறும் நுாறு மெட்ரிக்., டன் கொப்பரை, தங்கள் ஆலைகளுக்கு தேவை உள்ளதால், தமிழகத்தில், விரைவில், கொப்பரை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என 'கேராபெட்' அதிகாரிகள் உடுமலையில் தெரிவித்தனர். உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில், தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை வாரியம் மற்றும் கேரள அரசின், 'கேராபெட்' நிறுவனம் சார்பில், விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கலாமணி வரவேற்றார். கேராபெட் நிறுவன அதிகாரிகள், ஜெயசீலன், சஜின் பேசியதாவது: கேரளாவில் உள்ள 'கேராபெட்' மற்றும் அதன் துணை நிறுவனங்கள், தேங்காய் எண்ணெய் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிறுவனங்களால் இயக்கப்படும் ஆலைகளுக்கு, நாள்தோறும், 100 மெட்ரிக்., டன் அளவுக்கு கொப்பரை தேவைப்படுகிறது. எனவே தமிழகத்தில் தென்னை பிரதானமாக உள்ள பகுதிகளில், கொப்பரை கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில், விவசாயிகளுடன் கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர் நிறுவனங்கள் வாயிலாக, கொப்பரை கொள்முதல் செய்தால், அனைத்து தரப்பினரும் பயன்பெறுவார்கள். இதற்காக தமிழக தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் விற்பனை வாரியத்தின் உதவி கோரப்பட்டுள்ளது. குறிப்பாக, தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்கள் விவசாயிகளிடமிருந்து தேங்காய்களை கொள்முதல் செய்து கொப்பரையாக விற்பனை செய்தால், அவர்களிடமிருந்து கேரள நிறுவனங்கள் நேரடியாக கொள்முதல் செய்து கொள்ள ஆர்வமாக உள்ளன. தமிழகத்தின் வர்த்தகம் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்து, கொள்முதல் செய்து, சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக்கணக்கிற்கு நேரடியாக பணம் செலுத்தப்படும். கலந்தாய்வு கூட்டங்களில் பெறப்பட்ட விபரங்கள் கேரள அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு, நேரடி கொள்முதலை விரைவில் துவக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, பேசினார். கூட்டத்தில், உடுமலை, குடிமங்கலம் வட்டார விவசாயிகள், உற்பத்தியாளர் நிறுவனத்தினர் பங்கேற்று நேரடி கொள்முதலில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து பேசினர். பெரும்பாலான விவசாயிகள், கொப்பரைக்கு மாற்றாக, நேரடியாக தேங்காயை கொள்முதல் செய்தால் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தனர்.