ஒரு கி.மீ., துாரம் பிளாஸ்டிக் கழிவு; ஓடை துார்வாரும் பணிகள் தீவிரம்
பல்லடம்: பல்லடத்தில், ஒரு கி.மீ, துாரத்துக்கு பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடக்கும் ஓடையை துார்வாரும் பணியில், நகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.கோவை மாவட்ட பகுதிகள் வழியாக வரும் நீரோடை, திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டாரத்துக்கு உட்பட்ட அனுப்பட்டி, புளியம்பட்டி, பணிக்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் வழியாக, பல்லடம் நகர பகுதிக்குள் வருகிறது.இங்கிருந்து, பச்சாபாளையம், ஒன்பதாம் பள்ளம், தெற்குபாளையம், சேடபாளையம், சின்னக்கரை வழியாக நொய்யல் நதியை சென்றடைகிறது.அனுப்பட்டி கிராமத்தில் துவங்கும் இந்த ஓடை, படிப்படியாக மாசடைந்து, நகருக்குள் வரும்போது முழுமையாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக, பொதுமக்களால் பயன்படுத்தி வீசப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்கள், டம்ளர்கள், நெகிழிப்பைகள், குப்பைகள், கழிவுகள் உள்ளிட்டவை மழைநீரில் அடித்துவரப்பட்டு, ஓடை முழுவதும் பரவலாக சிதறி கிடக்கின்றன. குறிப்பாக, முல்லை நகரில் உள்ள தடுப்பணை பிளாஸ்டிக் கழிவுகளால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. பச்சை நிறமான தண்ணீர்
எண்ணற்ற பறவையினங்கள் வந்து செல்லும் இடமாக உள்ள இந்த தடுப்பணை, பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகளால் தண்ணீர் பச்சை நிறத்துக்கு மாறியுள்ளது.பொதுமக்கள் அலட்சியத்துடன் வீசிய பிளாஸ்டிக் கழிவுகள், ராம் நகர், முல்லை நகர், ஆண்டாள் நகர், பச்சாபாளையம் என, ஏறத்தாழ, ஒரு கி.மீ., துாரத்துக்கு பரவிக்கிடக்கின்றன.பல ஆண்டுகளாக கழிவுகள் நிறைந்து காணப்பட்ட இந்த நீரோடையை முழுமையாக துார்வாரும் பணியில் நகராட்சி நிர்வாகம் இறங்கியுள்ளது. நகராட்சிக்கு பாராட்டு
பல ஆண்டு காலமாக, குப்பைகள், கழிவுகள் மற்றும் சீமை கருவேல் மரங்கள் ஆக்கிரமித்தும், சுகாதாரச்சீர்கேடுடன் கிடந்த ஓடை, தற்போது, நகராட்சி நிர்வாகத்தின் முயற்சியால் புத்துயிர் பெற்று வருகிறது.நகராட்சியின் இந்த முயற்சியை பொதுமக்கள் பலர் பாராட்டி வருகின்றனர். பல ஆண்டுகளுக்குப் பின் மீட்டெடுக்கப்பட்ட இந்த ஓடையில், மீண்டும் கழிவுகள், குப்பைகள் கலக்காத வகையில், சுகாதாரமாக வைத்திருப்பது நகராட்சி மட்டுமின்றி, பொதுமக்களின் கடமையும் ஆகும்.தன்னார்வலர்கள் கைகோர்க்கலாம்பல்லடம் நகராட்சி மேற்கொண்டுள்ள இந்த முயற்சியால், நீர்நிலைகள் பாதுகாக்கப்பட்டு, நிலத்தடி நீர்மட்டமும் உயரும் வாய்ப்பு உள்ளது. ஆனால், அனுப்பட்டி கிராமத்தில் துவங்கி நொய்யல் நதிக்கு செல்லும் வரை உள்ள ஓடையின் பெரும்பாலான பகுதிகள், குப்பைகள், கழிவுகள் மற்றும் சீமை கருவேல் மரங்கள் ஆக்கிரமித்தும், பிளாஸ்டிக் கழிவுகள் குப்பைகள் நிரம்பியும் சுகாதார சீர்கேடுடன் உள்ளது. தன்னார்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இந்த அறப்பணியில் கைகோர்த்தால், செயற்கையாக சீரழிக்கப்பட்ட நீரோடை மீண்டும் இயற்கைக்குத் திரும்பும்.முதல் கட்டமாக, நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஓடை முழுமையாக துார்வாரப்பட்டு வருகிறது. ஓடையை ஆக்கிரமித்து இருந்த சீமை கருவேல மரங்கள், செடி - கொடிகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டுள்ளன. தடுப்பணையில் தேங்கி நிற்கும் பல ஆண்டுகளான பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டுமானால், தடுப்பணையில் உள்ள தண்ணீரை வெளியேற்ற வேண்டும். தடுப்பணை சிறிது உடைக்கப்பட்டு, கழிவுகள் கலந்த நீர் முழுமையாக வெளியேற்றப்பட்ட பின், ஓடையில் பரவிக் கிடக்கும் கழிவுகள் அனைத்தும் அகற்றப்படும். ராம் நகர் முதல் சேடபாளையம் வரை ஓடை துார்வாரப்பட உள்ளது.- மனோகரன், நகராட்சி கமிஷனர்.