உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சின்னவெங்காய சாகுபடி பணி தீவிரம்; விலையை எதிர்பார்க்கும் விவசாயிகள்

சின்னவெங்காய சாகுபடி பணி தீவிரம்; விலையை எதிர்பார்க்கும் விவசாயிகள்

உடுமலை; சின்னவெங்காயத்துக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், சாகுபடிக்கான பணிகளை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரத்தில், ஆண்டுதோறும், 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. அறுவடை சீசனில், விலை வீழ்ச்சி காரணமாக, பெரும்பாலான விவசாயிகள் மாற்றுச்சாகுபடிக்கு மாறிவிட்டனர். நாற்றுப்பண்ணைகளில் சின்ன வெங்காயம் நாற்று வாங்கி நடவு செய்தல், விதை வாயிலாக நாற்றங்கால் அமைத்து நடவு செய்தல் மற்றும் நேரடியாக விதை வெங்காயம் நடவு செய்தல் ஆகிய முறைகளில் சாகுபடி செய்யப்படுகிறது. நேரடியாக வெங்காயம் நடவு செய்தால், 70 முதல் 90 நாட்களில் அறுவடை செய்ய முடியும். விதை வாயிலாக சாகுபடி செய்யும் போது, 120 முதல் 130 நாட்களாகும். தென்மேற்கு பருவமழைக்கு பின், சின்னவீரம்பட்டி, குடிமங்கலம், பாலப்பம்பட்டி சுற்றுப்பகுதிகளில், பரவலாக சின்னவெங்காயம் சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். விவசாயிகள் கூறுகையில், 'தற்போது உடுமலை உழவர் சந்தையில், சின்னவெங்காயம் கிலோ 35-42 ரூபாய் வரை விற்பனையாகிறது. வரும் சீசனில், சாகுபடி பரப்பு குறைவாக உள்ளதால், தேவை அதிகரித்து, சின்னவெங்காயத்துக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம். நடவு சீசனில் நாற்று மற்றும் இதர இடுபொருட்களை தோட்டக்கலைத்துறை மானியத்தில் வழங்கினால், பயனுள்ளதாக இருக்கும். விலை வீழ்ச்சியின் போது, இருப்பு செய்ய தேவையான கட்டமைப்பு வசதிகளை உடுமலை பகுதியில் ஏற்படுத்த வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி