ஆன்லைன் சொத்துரிமை சான்று கட்டாயம்! ஆமை வேகத்தில் அறங்காவலர் நியமன பணிகள்
திருப்பூர்; 'ஆன்லைன்' மூலமாக, சொத்துரிமை சான்று பெறுவது சவாலாக மாறியுள்ளதால், ஹிந்து சமய அறநிலையத்துறை கோவில் அறங்காவலர் நியமன பணி நகராமல் நிற்பதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், புராதனமான கோவில்கள் பல்வேறு இடங்களில் அமைந்துள்ளன. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், கோவில்களுக்கு அறங்காவலர் குழுக்களை நியமிக்க நடவடிக்கை எடுத்தது.மாவட்டத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பில், 1,273 கோவில்கள் உள்ளன. ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வாக திட்ட அனுமதி பெற்ற கோவில், பரம்பரை அறங்காவலர் கோவில், நிலுவை வழக்கு உள்ள கோவில், உபகோவில்கள், கட்டளை கோவில்கள் மற்றும் பஜனை மடங்கள் நீங்கலாக, 1,074 கோவில்களுக்கு அறங்காவலர் நியமனம் செய்ய திட்டமிடப்பட்டது.பெரிய கோவில்களுக்கு அறங்காவலராக, வி.ஐ.பி.,கள் மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டதால், ஆளும்கட்சி நிர்வாகிகள் சிபாரிசுப்படி, அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அந்தவகையில், 500க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு அறங்காவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளது. முக்கியமான கோவில்களுக்கு அறங்காவலர் ஆக, பலரிடையே போட்டி நிலவியது. விண்ணப்பங்களை தேர்வு செய்து பரிசீலித்து, நியமனம் செய்ய தாமதம் ஏற்பட்டது. முன்வராதது ஏன்?
ஹிந்து சமய அறநிலைத்துறை சார்பில், அறங்காவலர் நியமனம் செய்யப்படும் கோவில் விவரங்கள், எங்கும் வெளிப்படையாக வெளியிடப்படவில்லை. சம்பந்தப்பட்ட கோவில், உதவி கமிஷனர் அலுவலகத்தில் மட்டும், விண்ணப்பம் பெறப்படும் என்று, 'ஏ4' தாளில் அறிவிப்பு செய்தது, பக்தர்களை முழுமையாக சென்றடையவில்லை.பத்திரிக்கை செய்தி வாயிலாக, வெளிப்படையாக அறிவிப்பு செய்திருந்தால், அனைத்து கோவில்களுக்கும் அறங்காவலர் நியமனம் எளிதாக நடந்திருக்கும்.அறங்காவலர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க, சொத்துரிமை சான்று விண்ணப்பிக்க வேண்டும்; போலீஸ் தரப்பில் பெற்று, தடையின்மை சான்றும் சமர்ப்பிக்க வேண்டும்.இத்தகைய சான்று வாங்க அலைய முடியாமலேயே, பலரும் அறங்காவலராகும் ஆசையை துறந்து விட்டனர். சிறிய கோவில்களுக்கு அறங்காவலர் நியமன அறிவிப்பு வெளியானாலும், விண்ணப்பிக்க யாரும் முன்வரவில்லை.இதனை பரிசீலித்து முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே, அறங்காவலர் நியமனம் சாத்தியமாகும்.சிறிய கோவில்கள் ஏராளமாக இருந்தும், அதற்கு அறங்காவலராக பணியாற்ற யாரிடமும்ஆர்வம் இல்லை. அரசு அறிவித்தபடி, அனைத்து கோவில்களுக்கும் அறங்காவலர் நியமனம் செய்யப்படவில்லை; அதிகாரிகளும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை55 கோவில்களில் கும்பாபிேஷகம்இதுகுறித்து ஹிந்து சமய அறநிலையத்துறை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்முத்துராமன் கூறியதாவது:திருப்பூர் மாவட்ட அளவில், 500க்கும் அதிகமான கோவில்களுக்கு அறங்காவலர் நியமனம் நடந்துள்ளது; மற்ற கோவில்களுக்கு அறங்காவலர் நியமனம் செய்வதற்கான ஏற்பாடு தொடர்ந்து நடந்து வருகிறது; அறிவிப்பு வெளியான பின்னரும், விண்ணப்பிக்க ஆர்வம் காட்டுவதில்லை. மாவட்டத்தில், 60க்கும் அதிகமான கோவில்களில் கும்பாபிேஷகம் நடந்துள்ளது. 55 கோவில்களில், பாலாலயம் செய்து திருப்பணிகள் நடந்து வருகின்றன; விரைவில் கும்பாபி ேஷகம் நடக்கும். கருவலுாரில் உள்ள, ஆயிரம் ஆண்டுகள் பழமையான, வேணுகோபால சுவாமி கோவிலை புனரமைத்து திருப்பணி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.