| ADDED : மார் 12, 2024 09:53 PM
உடுமலை:மாணவர்களின் கற்றல் திறன்களை மேம்படுத்துவதற்கான, வினாடி வினா தேர்வு நேற்று துவங்கியது.மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, வளரறி மதிப்பீடு செய்வதற்கும், திறன் மேம்பாட்டிற்கும் கடந்த கல்வியாண்டு முதல், மாணவர்களுக்கு வினாடி வினா தேர்வு நடத்தப்படுகிறது.ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, அந்தந்த பாட ஆசிரியர்கள் அந்த பாடங்களுக்கு ஏற்ப போட்டி நடத்துவதற்கும், அதற்கான மதிப்பீடு வழங்கும் முறை குறித்தும், ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.இத்தேர்வுகள் ஆன்லைனில் நடக்கிறது. ஒவ்வொரு பாடத்திலும், 5 மதிப்பெண்களுக்கு என மொத்தமாக, 25 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கிறது.அந்தந்த பாட ஆசிரியர்கள், எந்த பாடத்தில் வினாக்கள் எடுப்பது என்பதை ஆன்லைனில் பதிவிடுகின்றனர். அதற்கேற்ப வினாக்கள் தயாராகின்றன.நடப்பாண்டில் இத்தேர்வு, நேற்று முதல் 20ம்தேதி வரை பள்ளிகளில் நடத்தப்படுகிறது. உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள அரசுப்பள்ளிகளில் இத்தேர்வுகளை துவங்கியுள்ளனர்.தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள்களை வைத்து, மாணவர்களுடன் கலந்துரையாடவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.