ஸ்ப்ரீ -2025 திட்டத்தில் இணைய வாய்ப்பு
திருப்பூர்; ''இ.எஸ்.ஐ., திட்ட பயன் தகுதியானவரை சென்றடைய, 'ஸ்ப்ரீ -2025' திட்டத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ளலாம்,'' என, இ.எஸ்.ஐ., மண்டல துணை இயக்குனர் கார்த்திகேயன் பேசினார். இ.எஸ்.ஐ., திட்டம் சார்பில், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஊழியர்கள் பதிவை ஊக்குவிக்கும் 'ஸ்ப்ரீ -2025' திட்டம் துவங்கப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்டம் வாரியாக, 'ஸ்ப்ரீ' திட்ட விழிப்புணர்வு முகாம் நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலகம் அளவிலான, விழிப்புணர்வு கூட்டம், விகாஸ் வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடந்தது. கோவை இ.எஸ்.ஐ., மண்டல துணை இயக்குனர் கார்த்திகேயன், சிறப்பு விழிப்புணர்வு முகாமை துவக்கி வைத்தார். அவர் பேசுகையில், 'ஜூலை 1 முதல் டிச., 31ம் தேதி வரை, 'ஸ்ப்ரீ -2025' திட்டம் அமலில் இருக்கும். இதன்மூலமாக, தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் மற்றும் அவற்றின் ஊழியர்களை பதிவு செய்துகொள்ளலாம். முந்தையகால பதிவு, தாமதமான பதிவு குறித்த எவ்வித ஆய்வும் இருக்காது. இத்திட்டத்தில் பதிவு செய்யும் போது, ஒரு மாதத்துக்கான பங்களிப்பு தொகையும் செலுத்த வேண்டியதில்லை. இ.எஸ்.ஐ., திட்ட பயன் அனைவரையும் சென்றடைய, இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளலாம்,' என்றார். மாவட்ட கல்வி அலுவலர் மணிமாறன் பேசுகையில், ''இ.எஸ்.ஐ., திட்டத்தில் பதிவு செய்ய வேண்டிய பள்ளிகள் விடுபட்டிருந்தால், பள்ளிகளும், அவற்றின் ஊழியர்களும் முறையாக பதிவு செய்துகொள்ளலாம்,'' என்றார். சிறப்பு முகாமில், சி.பி.எஸ்.இ., மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகள் பங்கேற்றனர்.