குளத்தில் கட்டுமான பணிக்கு எதிர்ப்பு
உடுமலை; 'குளத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், எவ்வித கட்டுமான பணிகளையும் ஒன்றிய நிர்வாகத்தினர் மேற்கொள்ள கூடாது,' என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். உடுமலை ஒன்றியம், பாப்பனுாத்து ஊராட்சிக்குட்பட்ட குளம், ஆனைமலை ரோட்டில் இருந்து பிரியும் கிராம இணைப்பு ரோட்டில் அமைந்துள்ளது. இது சுற்றுப்பகுதி விளைநிலங்களின் நிலத்தடி நீர் மட்டத்துக்கு ஆதாரமாக உள்ளது. சில மாதங்களுக்கு முன், ஊராட்சி நிர்வாகத்தினர் குளத்தில், கழிவுகளை கொட்டினர். விவசாயிகள் கூறுகையில், 'குளத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், கழிவுகளை கொட்ட கூடாது. எவ்வித அறிவிப்பும் இல்லாமல், கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள ஒன்றிய நிர்வாகத்தினர் முயற்சித்து வருகின்றனர். இதைக்கண்டித்து, திருப்பூர் கலெக்டருக்கும் புகார் மனு அனுப்பியுள்ளோம்,' என்றனர்.