பசும் சோலையாகிறது ஒரத்துப்பாளையம் அணை
'முட்டம் துவங்கி 32 அணைக்கட்டு...'கொங்கு சோழர் காலக் கல்வெட்டு மூலம் நொய்யல் ஆற்றுப்பாச னத்தை அறிய முடிகிறது.கோவை பேரூருக்கு மேற்கே உள்ள முட்டம், கரூர் மாவட்டம் நொய்யல் கிராமம் வரை, 32 அணைக்கட்டுகள் அமைத்து, 32 குளங்களை நிரப்பி, ஆண்டு முழுவதும் பாசனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உபரிநீர் மீண்டும் நொய்யலில் சேரும் வகையில், 1000 ஆண்டுகள் முன்னதாக, கொங்கு சோழர்களின் நீர் மேலாண்மை சிறப்பாக இருந்துள்ளது.கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் சாக்கடைக்கழிவுநீர் பாயும் ஆறாக நொய்யல் மாறிப்போனது. மழைக்காலங்களில் மட்டும் புதுவெள்ளம் பாய்கிறது. எதிர்மறை விளைவு
ஒரத்துப்பாளையம் அணை, 1992ம் ஆண்டு, 1,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி, நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது. திருப்பூரில் படுவேகமாக தொழில் வளர்ந்த போது, சாயக்கழிவு ஆறாக பாய்ந்து, அணையை நிரப்பியது. இது எதிர்மறை விளைவை ஏற்படுத்தியது.விவசாயிகள் கோர்ட்டை அணுகிய பிறகு, சாய ஆலைகளில் 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட்டது. சுத்தம் செய்யப்பட்ட ஒரத்துப்பாளையம் அணையில் தண்ணீர் தேக்கக்கூடாது என்பது கோர்ட் உத்தரவு. அணைக்கட்டு பகுதியில், சீமைக்கருவேல மரங்கள், 20 அடி உயரத்துக்கு வளர்ந்து நிற்கின்றன. மரக்கன்று நடும் திட்டம்
'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் மூலம், காங்கயம் 'துளிகள்' அமைப்புடன் இணைந்து மண்சார்ந்த, மரபுசார்ந்த மரக்கன்று நட்டு வளர்க்கும் திட்டம், ஒரத்துப்பாளையத்தில் துவங்கியுள்ளது. விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம், திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, முதல் ஆண்டில், 100 ஏக்கரில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி, பாதுகாப்பு வேலி அமைத்து, மரக்கன்று நடும் பணி நடந்து வருகிறது.விவசாயிகள் பயன்படுத்தி வந்த கிணறுகளை துார்வாரி, சோலார் மோட்டார்களை இயக்கி, தண்ணீர் பாய்ச்சவும் திட்டமிடப்பட்டுள்ளது. மழைநீரால் மண்அரிப்பு ஏற்படுவதை தடுக்க, குறு பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம், 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், இப்பணிகள் நடந்து வருகின்றன. திருப்பூரின்பசுமை பரிகாரம்
'நொய்யலை கெடுத்த திருப்பூர்; ஒரத்துப்பாளையத்தின் எதிர்காலம் என்ன?' என்ற நீண்ட நாளைய கேள்விகளுக்கெல்லாம் தற்போது விடை கிடைத்துள்ளது. ஒரத்துப்பாளையம் அணைக்கட்டு பகுதியில் சாயக்கழிவால் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்ய, மரங்கள் வளர்த்து, பசுஞ்சோலையாக மாற்றும் கூட்டு முயற்சிக்கு, 'வெற்றி' அமைப்பு வழிகாட்டியுள்ளது.நொய்யலில் சாயக்கழிவு செல்வது தடைபட்டுள்ளது; மழைக்காலங்களில், சின்னமுத்துார் அணைகளில் தண்ணீரை தேக்கி, ஐந்து ஆண்டுகளாக விவசாயம் செய்யும் அளவுக்கு, அப்பகுதிகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன.மரங்கள் வளர்ப்பதால், பறவைகள், சிறு உயிரினங்களுக்கான வாழ்விடமாகவும் மாறப்போகிறது என, அப்பகுதி மக்கள் புத்துணர்வு பெற்றுள்ளனர்.ஆண்டுதோறும் 100 ஏக்கர்'வெற்றி' அமைப்பின் தலைவர் சிவராம் கூறியதாவது:'வெற்றி' அமைப்பின் வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் மற்றும் காங்கயம் 'துளிகள்' அமைப்பு சார்பில், மரம் வளர்ப்பு திட்டம், மாவட்ட நிர்வாகத்தின் ஆதரவுடன் துவங்கியுள்ளது. முதல்கட்டமாக, 100 ஏக்கரில், 4,500 மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படும். ஆண்டுதோறும், 100 ஏக்கரை சுத்தம் செய்து மரம் வளர்க்கப்படும். 'நுரையீரல்' பகுதியாக மாறும்
அமைச்சர் சாமிநாதன், கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆகியோர் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு, இப்பணிகளுக்கு அனுமதி பெற்று கொடுத்துள்ளனர். ஆற்றின் தென்புறம் உள்ள 600 ஏக்கர் திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்டது; வடபுறம் உள்ள 400 ஏக்கர் ஈரோடு மாவட்டத்துக்கு சேர்ந்தது. படிப்படியாக மரம் வளர்த்து, 10 ஆண்டுகளில் பசுஞ்சோலையாக மாற்றுவோம். ஒரத்துப்பாளையம் பகுதி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கான நுரையீரல் பகுதியாக மாறும்.இவ்வாறு அவர் கூறினார். 110 வகை மரபுசார் மரங்கள்
வேம்பு, நாட்டு அத்தி, ஆலமரம், அரசமரம், அத்திமரம், பாலைமரம், இலந்தை, இலுப்பை, நீர்மருது என, 110 வகை மரபுசார்ந்த, மண்சார்ந்த மரங்கள் நட்டு வைக்கப்படுகிறது. பழவகை மரங்கள் என்பதால், வரும் காலத்தில், பறவைகளுக்கான வாழ்விடமாக மாறும். பத்து ஆண்டுகளுக்கு பிறகு, சோலைக்காடாக நிச்சயம் மாறியிருக்கும்.'வனத்துக்குள் திருப்பூர்'திட்டம் தொடர்கிறது'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டம், மூன்று லட்சம் இலக்குடன் துவங்கியது. நேற்றைய நிலவரப்படி, 3.40 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன; மழைப்பொழிவு தொடர்வதால், பிப்., மாதம் வரை, 10வது திட்டத்தில் மரக்கன்று நடுவது தொடரும். 'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில், இரண்டு லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க உரிய ஏற்பாடு துவங்கியுள்ளது.