பொதுத்தேர்வு எழுதும் மாணவர் விவரங்களை சேகரிக்க உத்தரவு
திருப்பூர் : பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விபரங்களை தலைமை ஆசிரியர் சரிபார்த்து, தயாராக வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு, 2025 ஏப்., - மே மாதங்களில் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அரசு தேர்வுகள் இயக்ககம் துவங்கி உள்ளது. முதல்கட்டமாக மாவட்டம், தாலுகா, பள்ளி வாரியாக பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவியர் விபரங்களை சேகரித்து, சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இது குறித்து அரசு தேர்வுகள் இயக்கம் தரப்பில் இருந்து முதன்மை கல்வி அலுவலர், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இதற்காக தொடர் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.அதில்,' பொதுத்தேர்வு எழுதும் மாணவர் பட்டியல் தயாரிக்கும் பணியை தலைமை ஆசிரியர் நேரடி பொறுப்பில் மேற்கொள்ள வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பிறப்பு சான்றிதழ், தலைப்பெழுத்து (இன்ஷியல்) தமிழில் இருக்க வேண்டும். போட்டோ, பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயர், மொபைல் எண் சேகரிக்க வேண்டும்.தற்போது சமர்பிக்கப்படும் விபரம் அடிப்படையில் ஹால்டிக்கெட் துவங்கி மதிப்பெண் பட்டியல் வரை நடைமுறைகள் இருப்பதால், தவறு, திருத்தம் இல்லாமல் மாணவ, மாணவியர் விபரங்களை சேகரித்து தயாராக வைக்க வேண்டும். தவறுகள் ஏதேனும் வந்தால், அதற்கு தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டியது வரும்,' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.