அமராவதி சர்க்கரை ஆலையை இயக்க வல்லுநர் குழு அமைத்து உத்தரவு
உடுமலை:உடுமலை, அமராவதி சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து, அறிக்கை வழங்க வல்லுநர் குழு அமைத்து அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. தமிழகத்தின் முதல் கூட்டுறவு ஆலையாக, 1960ல் துவக்கப்பட்டது. நடப்பு பருவத்துடன், மூன்று ஆண்டாக ஆலை இயங்காததால், கரும்பு விவசாயிகள், தொழிலாளர்கள் பாதித்து, பல போராட்டங்கள் நடத்தினர். ஆக., 11ல், உடுமலையில் அரசு விழாவில் பங்கே ற்ற தமிழக முதல்வர் ஸ்டாலின், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய, வல்லுநர் குழு அமைக்கப்படும் என அறிவித்தார். அதன் அடிப்படையில், வல்லுநர் குழு அமைத்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சர்க்கரைத்துறை ஆணையர், தொழில் நுட்ப உயர் அலுவலர் உள்ளிட்ட, 10 பேரை கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதே அதிகாரிகள்; குழு மட்டும் புதுசு
விவசாயிகள் கூறியதாவது: அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை நவீனப்படுத்த, 10 ஆண்டுக்கும் மேலாக வலியுறுத்தியும், அரசு கண்டு கொள்ளவில்லை. மூன்று ஆண்டாக ஆலை இயங்காமல் உள்ளது. ஏற்கனவே பல முறை ஆய்வு செய்த குழுவையே மீண்டும் அமைத்துள்ளனர். வல்லுநர் குழுவினர் விரைவில் ஆய்வு செய்து, விவசாயிகள், தொழிலாளர்களிடம் கருத்து கேட்டு, ஆலையை மீண்டும் இயக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.