உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு மருத்துவமனையில் புறக்காவல் நிலையம்

அரசு மருத்துவமனையில் புறக்காவல் நிலையம்

திருப்பூர்: திருப்பூர், தாராபுரம் ரோட்டில், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, 26 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. பல்வேறு சிகிச்சைகள் தொடர்பாக, 3 ஆயிரம் பேர் வருகின்றனர். உள்நோயாளிகளாக, ஆயிரம் முதல், 1,500 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.பரபரப்பாக காணப்படும் மருத்துவமனையில், குழந்தை திருட்டு, வாகனம் திருட்டு போன்ற குற்ற சம்பவங்கள் நடக்கின்றன. இறந்தவர்கள் சடலம் பெறுவது தொடர்பாக அவ்வப்போது போராட்டம் நடக்கிறது. மருத்துவமனையில் ஏற்படும் பிரச்னைகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க பெயரளவில் மட்டுமே போலீசார் நியமிக்கப்பட்டு இருந்தனர். பெரிய கட்டமைப்பு உள்ள மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லுாரிக்கு தனியாக போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் இருந்து வந்தது.போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் மருத்துவமனை வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மருத்துவமனை டீனுடன் கலந்து ஆலோசித்தார். தனியாக ஸ்டேஷன் அமைக்கும் வரை, தற்காலிக ஏற்பாடாக புறக்காவல் நிலையத்தை செயல்படுத்த கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். இதற்காக, எஸ்.எஸ்.ஐ.,கள் முருகானந்தம், தனிக்கொடி உள்பட எட்டு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். புறக்காவல் நிலையத்தை உதவி கமிஷனர் செங்குட்டுவன், இன்ஸ்பெக்டர் கணேசன் ஆகியோர் துவக்கி வைத்தனர். போலீசார், மூன்று 'ஷிப்ட்' முறையில் பணியாற்றுவர். பொதுமக்கள் எளிதாக அணுகும் வகையில், பிரத்யேக மொபைல் போன் எண் வழங்கப்பட உள்ளது. ஸ்டேஷனுக்கு தேவையான டேபிள், சேர் உள்ளிட்ட பொருட்களை வழங்கவும் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !