உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பல்லடத்தில் உயர்மட்ட மேம்பாலம்: பழனிசாமி வாக்குறுதி

பல்லடத்தில் உயர்மட்ட மேம்பாலம்: பழனிசாமி வாக்குறுதி

பல்லடம்;''பல்லடத்தின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், உயர்மட்ட மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பிரசாரத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி உறுதியளித்தார். பல்லடத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். என்.ஜி.ஆர்., ரோட்டில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றினார். முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, ராதாகிருஷ்ணன், பல்லடம் எம்.எல்.ஏ., ஆனந்தன், முன்னாள் எம்.எல்.ஏ., நடராஜன், பரமசிவம் மற்றும் நகர, ஒன்றிய நிர்வாகிகள் பழனிசாமிக்கு வரவேற்பு அளித்தனர். பழனிசாமி பேசியதாவது: வரலாறு தெரியாமல் ஸ்டாலின் பேசுகிறார். அ.தி.மு.க., வெற்றிக்கு இங்குள்ள கூட்டமே சாட்சி. மக்கள் நினைத்தால் எந்த கட்சியும் ஆட்சிக்கு வரலாம்; ஆட்சியில் இருந்தும் இறக்கலாம். மக்கள்தான் நீதிபதிகள். எதிர்வரும் சட்டசபை தேர்தலில் சரியான தீர்ப்பு வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஊழல்தான் இந்த ஆட்சியின் சாதனை. பத்து ரூபாய் அனைவருக்கும் நினைவு இருக்கும். தினமும், 15 கோடி ரூபாய் என, நான்கு ஆண்டுகளில், 22 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளனர். ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. இன்னும், 40 ஆயிரம் கோடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது. பணம், நகை திருடி கேள்விப்பட்டுள்ளோம். உடல் உறுப்பு திருடுவது இதுதான் முதல்முறை. தி.மு.க.,வினர் நடத்தும் மருத்துவமனைக்கு சென்றால், உடல் உறுப்புகள் உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ள வேண்டிய நிலை உள்ளது. உறுப்பு திருடும் அரசு தேவையா? எத்தனையோ திருடிவிட்டு இப்போது உறுப்பு திருட வந்துவிட்டனர். யாருடன் கூட்டணி வைத்தாலும் அ.தி.மு.க., கொள்கை அடிப்படையில் தான் செயல்படும். ஸ்டாலினின் உண்மையான முகத்தை தமிழக மக்கள் பார்த்து விட்டனர். கருணாநிதி குடும்பத்தை தவிர்த்து கட்சியிலும், ஆட்சியிலும் வேறு யாருமே வர முடியாது. பல்லடத்தின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், உயர்மட்ட மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, திருப்பூரில் இருந்து வந்த பழனிசாமிக்கு, பல்லடத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. வழியெங்கும் கொடிகள், தோரணங்கள், வாழை, கரும்பு உள்ளிட்டவை கட்டப்பட்டிருந்தன. ஆடல் பாடல், கரகாட்டம், ஒயிலாட்டம் என, கலை நிகழ்ச்சிகள் மற்றும் மேள தாளங்கள், டிரம்ஸ், வாண வேடிக்கை என, பல்லடம் நகர பகுதி விழாக்கோலம் பூண்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ