பரிதாப நிலையில் பல்லடம் பஸ் ஸ்டாண்ட்; பயணிகள் குவிந்தாலும் குறைவான வசதிகள்
பல்லடம்; பல்லடம் வட்டாரத்தில், 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். தொழில் நகரங்களான கோவை, திருப்பூருக்கு மத்தியில் உள்ளதால், தொழில், வேலை, வியாபாரம், கல்வி, மருத்துவம் உள்ளிட்டவற்றுக்கு, பிரதான வழித்தடமாக உள்ளது.தொழிலாளர்கள், பள்ளி- கல்லுாரி மாணவர்கள், அரசு - தனியார் ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர், தினசரி, பல்லடத்தில் இருந்து திருப்பூர், கோவை செல்கின்றனர். இதனால் பல்லடம் பஸ் ஸ்டாண்ட் எந்நேரமும் பரபரப்பாக காணப்படும். ஆயிரக்கணக்கான பொதுமக்கள், தொழிலாளர்கள் வந்து செல்லும் பஸ் ஸ்டாண்டில், அடிப்படை வசதி குறைவாக உள்ளது.பஸ் ஸ்டாண்டில், இருக்கை வசதி பற்றாக்குறை உள்ளது. ஏற்கனவே உள்ள இருக்கைகள் பலவும் சேதமடைந்துள்ளன. பெரும்பாலான நேரங்களில் பொதுமக்கள், பஸ்கள் செல்லும் வழித்தடத்திலேயே காத்திருப்பதால், விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது. இதேபோல், பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் ஆரோக்கியமான குடிநீர் வசதி கிடையாது. பஸ் ஸ்டாண்டுக்குள் பல ஆண்டுகள் முன் போடப்பட்ட ரோடு சேதமடைந்துள்ளது. பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் அடிக்கடி 'குடி'மகன்கள் மட்டையாகி கிடப்பது, திறந்தவெளியில் சிலர் சிறுநீர் கழிப்பதால் ஏற்படும் துர்நாற்றம் என, பல்வேறு அவலங்கள் நிலவி வருகின்றன. பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நகராட்சி முன்வர வேண்டும்.