உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பல்லாங்குழி சாலை... இருள்சூழ் வீதி... ஆபத்தான கால்வாய்

பல்லாங்குழி சாலை... இருள்சூழ் வீதி... ஆபத்தான கால்வாய்

திருப்பூர் மாநகர வார்டுகள், அடிப்படை பிரச்னைகளுக்குத் தீர்வு காணாமல் தவிக்கின்றன. இந்த வாரம், ஒன்பதாவது வார்டைக் களம் கண்டோம்.வார்டில் உள்ள பகுதிகள்: அங்கேரிபாளையம், வெங்கமேடு, துண்டுக்காடு, சீனிவாசா லே-அவுட், ஏ.எஸ்.எம்., காலனி, சுகம் நகர் மேற்கு, ஏ.டி., காலனி கிழக்கு, பாப்பண்ண செட்டியார் வீதி, எஸ்.டி.வி., நகர், வெங்கமேடு தோட்டம், தங்கம்மன் நகர், ஆர்.ஜி.எஸ்., நகர், வேலன் நகர், திருக்குமரன் நகர், வி.பி., சிந்தன் நகர், லட்சுமி நகர்.

துார்வாராத நல்லாறு

வெங்கமேடு - பெரியாயிபாளையம் சாலையில், நல்லாறு ஓடை அருகே, பொதுக்கழிப்பிடத்துக்கு பின்புறம் மயானம் பராமரிப்பு இல்லாமல், முட்புதர் மண்டி காணப்படுகிறது.சென்று வர வழியில்லை. சடலம் புதைக்க வழியில்லாத சூழல் உள்ளது. மழைக்காலங்களில் கூட துார்வாராமல் நல்லாறு புதர் மண்டிக்கிடக்கிறது. முட்புதர், ஆகாயத்தாமரைகள் வளர்ந்துள்ளதால், தண்ணீர் ஓடுகிறதா என்பதை தேடி கண்டுபிடிக்க வேண்டியுள்ளது.

விபத்து அபாயம்

அங்கேரிபாளையம் துவங்கி வெங்கமேடு, பெரியாயிபாளையம் சாலையில் அதிகளவில் வாகனங்கள் பயணிக்கின்றன. ஆனால், ஆக்கிரமிப்பால் பல இடங்களில் சாலை குறுகலாகவே உள்ளது. பல்லாங்குழி சாலையில், வாகனங்கள் வேகமாக பயணிப்பதால், விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.சாலையை மாநகராட்சி பராமரிப்பதுடன், தேவையான இடங்களில், வேகத்தடை அமைக்க வேண்டும். வி.கே., அரசு மேல்நிலைப்பள்ளி பெரியாயிபாளையம் முன் குழி தோண்டி சரிவர மூடாததால், ஜல்லிக்கற்கள் பெயர்ந்துள்ளன. பள்ளிக்கு வருவோர் தடுமாறுகின்றனர்.

நாய்கள் 'படை'

நல்லாறு, அதன் இணைப்பாக உள்ள சிறிய ஓடைகளில் இறைச்சி கழிவுகள் திறந்த வெளியில் கொட்டப்படுகிறது. இவற்றை தின்ன பல்வேறு இடங்களில் இருந்து படையெடுக்கும் நாய்களால், வீதியெங்கும் இவை சுற்றித்திரிகின்றன. இதனால், மக்களிடையே அச்சம் நிலவுகிறது.குப்பை தொட்டிகள் போதுமானதாக இல்லாததால், குப்பைகள், கழிவுகள் கொட்டி ஆங்காங்கே தீ வைப்பதால், புகைமூட்டம், வாகனங்களில் செல்வோருக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.

பூங்கா பரிதாபம்

ஆர்.ஜி.எஸ்., நகரில் மாநகராட்சி பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. தண்ணீர் இல்லாததால், செயற்கை நீரூற்று கழற்றி 'ஓரம்' கட்டப்பட்டுள்ளது. முற்றிலும் செடிகள் முளைத்துள்ளன. குழந்தைகள் விளையாடும் துாரி, விளையாட்டு உபகரணங்கள் சேதமாகியுள்ளன; சீர்செய்வது அவசியம்.மாநகராட்சி துவக்கப்பள்ளி, குடியிருப்புக்கு மத்தியில் பூங்கா இருந்தும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. வேலன் நகரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பராமரிக்க வேண்டும். கான்கிரீட் பூச்சு விழுந்து ஆபத்தாக உள்ளது. வெங்கமேடு கிழக்கு - ராஜகோபால் வீதியில் குப்பை தொட்டி ஓரிடம், குப்பைகள் கொட்டுவது வேறு ஒரு இடத்திலும் உள்ளது. திறந்தவெளியில் கொட்டும் குப்பைகளால், பிளாஸ்டிக் கழிவுகள் காற்றுக்கு வீதி முழுதும் பறக்கின்றன.

தேவை தடுப்பு

அங்கேரிபாளையம் - செட்டிபாளையம், விரிவான சாக்கடை கால்வாய் வசதியில்லை. மண் கால்வாயாக உள்ளது; கழிவுநீர் தேங்கியிருக்கிறது. கால்வாய்கள் ஆழமாக உள்ளன; தடுப்புச்சுவர், வேலி இல்லை. வாகன ஓட்டிகள் வளைவில் திரும்பும்போது விழுந்து விடும் அபாயம் உள்ளது.குமரன் நகர் - லட்சுமி நகர் பகுதியில் ஆபத்தான வளைவில் திறந்த நிலையில், கால்வாய் உள்ளது. வளைவில் திரும்புவோருக்கு ஆபத்து காத்திருக்கிறது. வார்டில் குப்பை தொட்டிகள் குறைவாக இருப்பதால், ஆங்காங்கே குப்பை கொட்டப்படுகிறது.கூடுதலாக குப்பை தொட்டி வைக்க வேண்டும். வெங்கமேடு - ஆத்துப்பாளையம் ரோடு, கருப்பராயன் கோவில் வீதியில் உள்ள ஓடை, தடுப்பணை அருகே கழிவுகள் கொட்டப்படுகின்றன. சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது. ஓடையில் கழிவுகள் கொட்டுவதும், விதிமீறுவதும் தொடர்கிறது.

விளக்கு இல்லை

எஸ்.டி.வி., நகர், ஏ.எஸ்.எம்.ஆர்., கார்டன், தங்கம்மன் நகர் மின் வாரிய அலுவலகம் செல்லும் வழி, வேணு அவென்யூ, சீனிவாசா லே-அவுட், சன்பிளவர் கார்டன், மாதேஸ்வரன் கோவில் வீதி உள்ளிட்ட இடங்களில், 2018ல் மின்கம்பங்கள் நடப்பட்டன. 165 கம்பங்களில் மட்டும் தெருவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.ஆண்டுகள் உருண்டோடியும் 70க்கும் மேற்பட்ட கம்பங்களில் விளக்கு பொருத்தப்படவில்லை. குடியிருப்பு பகுதிகள் இருள்சூழ்ந்து காணப்படுவதால், தெருவிளக்கு பொருத்தும் பணியை விரைந்து தீர்க்க வேண்டும்.புதிய போர்வெல்கள் அமைக்க வேண்டும்ஏ.எஸ்.எம்.ஆர்., கார்டன், எஸ்.டி.வி., நகர், கிருஷ்ணவீணா நகர், மாதேஸ்வரன் வீதி உள்ளிட்ட பகுதியில் புதிதாக ரோடு அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வீதிகளில் தார் ரோடு அமைக்க பணிகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.- உப்புத்தண்ணீர் சப்ளை குறைவாக உள்ள பகுதியில் புதிதாக போர்வெல் அமைக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.விஸ்தரிப்பு செய்யப்பட்ட பகுதிகளில் தெருவிளக்கு பிரதான பிரச்னையாக உள்ளது. அனைத்து இடங்களிலும் தெருவிளக்கு விரைந்து பொருத்த வலியுறுத்தி வருகிறேன். நான்காவது குடிநீர் திட்ட விஸ்தரிப்பு பணி நடந்து வருகிறது. இயன்ற வரை மக்களுக்கு பணி செய்து வருகிறேன். புகார்கள் இருப்பின், 98946 62966 என்ற எண்ணில், தொடர்பு கொள்ளலாம்.- திவ்யபாரதி (அ.தி.மு.க.,), கவுன்சிலர்,மாநகராட்சி 9வது வார்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி