உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பி.ஏ.பி, நீர் திருட்டு தடுக்க வலுக்கும் எதிர்பார்ப்பு

பி.ஏ.பி, நீர் திருட்டு தடுக்க வலுக்கும் எதிர்பார்ப்பு

திருப்பூர் : வெள்ளகோவில் சுற்றுவட்டார விவசாயிகள், பி.ஏ.பி., நீர் திருட்டை தவிர்க்க கோரி, போராட்டங்களின் வாயிலாக அரசுக்கு அழுத்தம் கொடுக்க திட்டமிட்டு, ஒருங்கிணைந்து வருகின்றனர்.பரம்பிக்குளம் -ஆழியாறு நீர் பாசன திட்டத்தில், வெள்ளகோவில், காங்கயம் உள்ளிட்ட பகுதிகள் கடைமடை பகுதிகளாக உள்ளன. ஏராளமான விவசாயிகள், இந்நீரை நம்பி விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில், 'வாய்க்காலில் திறந்து விடப்படும் நீர், கடைமடையை முழுமையாக வந்து சேர்வதில்லை' என, விவசாயிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.இதுதொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, நீர் திருட்டு தடுப்பது தொடர்பான வழிகாட்டுதலையும் பெற்றுள்ளனர்.இருப்பினும், நீர் திருட்டு தடுப்பது தொடர்பாக, அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், போராட்டத்தின் வாயிலாக, அரசின் கவனம் திருப்ப திட்டமிட்டுள்ளனர்.

பொறியாளர் அலுவலகம்24ல் முற்றுகையிட முடிவு

வரும், 24ம் தேதி காலை, 10:00 மணிக்கு, பொள்ளாச்சி பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட திட்டமிட்டுள்ள விவசாயிகள், கால்நடைகளுடன், பெருந்திரளாக செல்வதென முடிவெடுத்து, ஒவ்வொரு கிராமம், கிராமமாக ஒருங்கிணைப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, விவசாயிகளின் ஆதரவை திரட்டி வருகின்றனர்.

நான்கில் மூன்று மடங்குதண்ணீர் திருட்டு

பி.ஏ.பி., வெள்ளகோவில கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்க தலைவர் வேலுசாமி கூறியதாவது;பி.ஏ.பி., சட்ட விதிகளின் படி, சமச்சீராக பாசனத்திற்கு நீர் வினியோகிக்கப்பட வேண்டும். ஆனால், பொங்கலுார் உட்கோட்ட பகுதிகளுக்கு வினியோகிக்கப்பட வேண்டிய நீரில், நான்கில் மூன்று மடங்கு மடைமாற்றி, பகிரங்கமாக நீர் திருட்டில் ஈடுபடுகின்றனர். பி.ஏ.பி., கண்காணிப்பு குழு தலைவர் மற்றும் திருப்பூர் தெற்கு கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு வழங்கியும், எவ்வித நடவடிக்கையும் இல்லை; வேறு வழியின்றி, முற்றுகை போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.அனுபவம் தந்த பாடம்கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, விவசாய நிலங்களில் தெரு நாய்களால் கடிபட்டு, வளர்ப்பு ஆடுகள் பலியாவது தொடர்ந்த நிலையில், இறக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை, மாநில அளவில் வெள்ளகோவில் சுற்றுவட்டார விவசாயிகள் தான் முதன் முறையாக முன்னெடுத்தனர். ஆர்ப்பாட்டம், முற்றுகை என பல்வேறு போராட்டங்களின் வாயிலாக அரசின் கவனத்தை திருப்பினர். அதன் விளைவாக தான், நாய்கள் கடித்து பலியாகும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்கும் அரசாணை வெளியிடப்பட்டு, தற்போது, இழப்பீடும் வழங்கப்பட்டு வருகிறது.அந்த போராட்ட அனுபவத்தை மையமாக வைத்தே, தற்போது பி.ஏ.பி., நீர் திருட்டு தடுக்க கோரிய போராட்டங்களையும் திட்டமிட்டுமிட்டு வருகின்றனர். கிராமம் வாரியாக நடத்தப்படும் ஆலோசனைக்கூட்டத்தில், பெண்கள் அதிகளவில் பங்கேற்க முன்வருவது, குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ