வேளாண் துறை சார்பில் ஒட்டுண்ணி உற்பத்தி மையம்; உயிரியல் முறையில் பூச்சிகளை அழிக்க அறிவுரை
உடுமலை ; நெல், கரும்பில் உயிரியல் முறையில் தீங்கு செய்யும் பூச்சிகளை கட்டுப்படுத்தி, மகசூல் பெருக்கலாம். வேளாண் துறை சார்பில் ஒட்டுண்ணி உற்பத்தி செய்து வினியோகம் செய்யப்படுவதாக, வேளாண் உதவி இயக்குனர் தேவி தெரிவித்தார்.உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம், தாராபுரம் வட்டாரங்களில், தலைமைச்செயலக உதவி செயற்பொறியாளர் செபஸ்தீன் பிரிட்டோ ராஜ் தலைமையிலான அதிகாரிகள் குழு, திட்ட செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது.அதன் ஒரு பகுதியாக, உடுமலையிலுள்ள, வட்டார ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் செயல்படும் கரும்பு ஒட்டுண்ணி வளர்ப்பு மையத்தை ஆய்வு செய்தனர்.இங்கு, உயிரியல் முறை பூச்சி அழிக்கும் ஒட்டுண்ணி உற்பத்தி மையம் செயல்பாடுகள் குறித்து விளக்கினர்.இந்த ஒட்டுண்ணியானது, டிரைக்கோகிரம்மா கைலோரிஸ் எனப்படும், கரும்பு இடைக்கணு புழு மற்றும் நெல் இலைச்சுருட்டுப்புழுக்களின் முட்டைகளை அழிக்கக்கூடிய, இயற்கை வழி முட்டை ஒட்டுண்ணியாகும்.டிரைக்கோகிரம்மா குளவியானது, இடைக்கணுப்புழு முட்டை மற்றும் நெல் இலைசுருட்டுப்புழு முட்டைகளில், தன் முட்டைகளை , அதாவது சுமார், 1-10 முட்டைகளை இட்டு அதிலிருந்து, ஏழு நாட்களுக்குள் முழு கூண்டுப்புழு தாய்குளவியாக மாறி, வெளிவருகிறது.மீண்டும் தீங்கு விளைவிக்கும் பூச்சிகளின் முட்டைகளில் முட்டையிட்டு அழித்துவிடுகிறது. உற்பத்தி செய்வதற்கு கார்சைரா நெல் அந்துப்பூச்சியின் முட்டை புற ஊதாக்கதிர் விளக்கு, அரைத்த கம்பு, பொடித்த நிலக்கடலை, நனையும் கந்தகம், ஈஸ்ட், நெல் ஆகும்.அந்துப்பூச்சியின் முட்டைகளை உற்பத்தி செய்ய, பிளாஸ்டிக்தட்டுக்களில், 2.5 கிலோ அரைத்த கம்பு குருணை சேர்த்து, அதனுடன், 100 கிராம் பொடித்த நிலக்கடலை, 5 கிராம் அளவு ஈஸ்ட், 5 கிராம் நனையும் கந்தகத்துாள் மற்றம் ஒரு 'சிசி' நெல் அந்துப்பூச்சி முட்டை சேர்த்து காடா துணி கொண்டு மூடி விட வேண்டும்.அதனை அப்படியே, 35 முதல் -40 நாட்கள் வைத்திருக்கும் போது நெல் அந்துப்பூச்சிகளின் முட்டை புழு, கூண்டுப்புழு பருவம் கடந்து தாய் அந்துப்பூச்சியாக வெளிவரும்.90 நாட்கள் வரை இந்த தாய் அந்துப்பூச்சிகளை பிடிக்க, பிளாஸ்டிக் தட்டுகளை கொசு வலைக்குள் வைத்து, பிடித்து முட்டையிடும் கூண்டுகளில் சேர்க்கும் போது, 4 நாட்களுக்கு முட்டையிடும். இதற்கு உணவாக நீர்த்த தேன் வழங்கப்படுகிறது.இவ்வாறு சேகரித்த முட்டைகளை, சல்லடை வாயிலாக ஜலித்து புற ஊதாக்கதிர் விளக்கின், ஒளியில் அரை மணிநேரம் வைக்கும் போது, முட்டையிலிருந்து புழு வராமல் தடுக்கப்படுகிறது.இதனை எடுத்து, ஒரு அட்டைக்கு 1 'சிசி' அதாவது, 20 ஆயிரம் முட்டைகள் வீதம் ஒட்டி, 6 அட்டைகளுக்கு, டிரைக்கோகிரம்மா கைலோரிஸ் ஒட்டுண்ணி முட்டை, ஒரு அட்டை, ( ஒரு சிசி) வீதம் பயன்படுத்தி முழு ஒட்டுண்ணி அட்டையாக மாற்றப்படுகிறது.இவ்வாறு மாற்றப்பட்ட அட்டைகள், 1 'சிசி' விலை ரூ.40 ஆகும். விவசாயிகளுக்கு உயிரியல் முறை பயிர்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் பூச்சிகளை கட்டுபாட்டுக் காரணியாக வினியோகம் செய்யப்படுகிறது.பயிர்களுக்கு பூச்சி மருந்துகள் தெளிப்பதை தவிர்த்து, கரும்பு மற்றும் நெல்லின் அடிப்பாகத்தில் கட்டிவிடப்படும், போது தீங்கு செய்யும் பூச்சியின் தாக்கம் குறைகிறது.எனவே, உயிரியல் முறை கட்டுபாட்டின் வாயிலாக, மருந்து செலவைக் குறைத்து மகசூலை அதிகரிக்க இயலும், என உடுமலை வேளாண் உதவி இயக்குனர் தேவி கூறினார்.