மேலும் செய்திகள்
தீபாவளி நெரிசல் தடுக்க போக்குவரத்து மாற்றம்
16-Oct-2025
திருப்பூர்: திருப்பூர் புது மார்க்கெட் வீதியில் கூட்ட நெரிசலை தவிர்த்து, மக்கள் எளிதாக நடந்து செல்லும் வகையில், மையதடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. வாகனங்களை நிறுத்த புதிய பாலம் ஒதுக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும், இரு நாட்களே உள்ளதால், திருப்பூர் மாநகரம் களைகட்டியுள்ளது. துணி கடைகளில் ஆரம்பித்து, ஸ்வீட்ஸ் கடை, பர்னிச்சர்ஸ், மொபைல் போன் உள்ளிட்ட கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. முக்கிய ரோடுகளில் மக்கள் நடமாட்டம், வாகனங்கள் பெருக்கம் அதிகம் உள்ளது. கூட்டங்களில் குற்றத்தடுப்பு நடவடிக்கையைாக 'மப்டி' போலீசார் கண்காணித்து வருகின்றனர். முக்கிய சந்திப்புகளில் 'வாட்சிங் டவர்' அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். போக்குரவத்துக்கு இடையூறாக உள்ள வாகனங்களை பறிமுதல் செய்து, போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். புது மார்க்கெட் ரோட்டில் வாகனங்கள் செல்ல தடை புதிய ஆடைகளை வாங்க மத்திய பஸ் ஸ்டாண்ட் சுற்றியுள்ள பகுதியில் உள்ள கடைகளுக்கு மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதன் காரணமாக, மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்கள் காமராஜர் ரோடு வழியாக வெளியே வருகிறது. புது மார்க்கெட் ரோட்டில் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த ரோட்டில் மக்கள் கூட்டம் நெரிசல் இன்றி, சீராக நடந்து செல்லும் வகையில், ரோட்டின் மையதடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. புது மார்க்கெட் ரோட்டில் உள்ள கடைகளுக்கு வர கூடிய மக்கள் வாகனங்களை நிறுத்த வளம் பாலத்தையொட்டி முனிசிபல் ரோட்டில் உள்ள புதிய பாலத்தை ஒதுக்கியுள்ளனர். அந்தந்த இடங்களில் அதற்கான அறிவிப்பு பலகையை வைத்துள்ளனர். வேறு இடங்களில் நிறுத்தக்கூடாது என மைக் மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். மக்கள் கூட்டம் அதிகம் உள்ள பகுதியில் சில அடி துாரத்துக்கு ஒரு போலீஸ் என, போலீசார் பணியில் உள்ளனர். மக்கள் கூட்டத்தை பொறுத்து தேவையான இடங்களுக்கு போக்குவரத்து மாற்றங்களை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு மக்கள் எவ்வித சிரமமும் இன்றி சொந்த ஊர்களுக்கு செல்ல அனைத்து பாதுகாப்பு, வசதிகளையும் அனைத்து துறையினருடன் சேர்ந்து செய்யப்பட்டுள்ளது. நெரிசல் இன்றி வாகனங்கள் செல்ல போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தை பொறுத்து போலீசார் மாற்றங்களை செய்வர். ஆம்னி பஸ்களில் பயணிகளை ஏற்றுவது தொடர்பாக, ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக பஸ் ஸ்டாண்ட், மக்கள் கூடும் இடம் என, அனைத்து பகுதியில் போலீசார் கண்காணிப்பில் உள்ளனர். வெளியூர் செல்லக்கூடிய மக்கள், தங்கள் அருகே உள்ள போலீஸ் ஸ்டேஷன் அல்லது கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து தகவல் தெரிவித்து செல்லலாம். இதுபோன்று தெரிவிக்கும் போது, சம்பந்தப்பட்ட பகுதியில் போலீசார் கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ள வசதியாக இருக்கும். - ராஜேந்திரன், போலீஸ் கமிஷனர்.
16-Oct-2025