கைத்தறித்துணி மீதான ஆர்வம்; நெசவாளர் வாழ்க்கை ஒளிரும்
திருப்பூர்; கைத்தறித்துறை சார்பில், 11வது தேசிய கைத்தறி தின சிறப்பு கண்காட்சி, திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் மனிஷ் நாரணவரே கண்காட்சியை துவக்கி வைத்து, கூட்டுறவு சங்கங்களின் ஸ்டால்களில் வைக்கப்பட்டிருந்த கைத்தறி ரகங்களை பார்வையிட்டார். கைத்தறி நெசவாளர், 6 பேருக்கு, முதியோர் ஓய்வூதிய திட்ட ஆணை, மூன்று பேர் குடும்பத்துக்கு, குடும்ப ஓய்வூதிய ஆணை, முத்ரா கடன் திட்டத்தில், தலா, 50 ஆயிரம் ரூபாய் வீதம், ஐந்து நெசவாளர்களுக்கு, 4.50 லட்சம் ரூபாய் கடனுதவி, நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தில், 8 பேருக்கு, 7.28 லட்சம் ரூபாய் மதிப்பில் திட்ட தொகை, கைத்தறி ஆதரவு திட்டத்தில், 134 நெசவாளர்களுக்கு கைத்தறி உபகரணங்கள் வழங்கப்பட்டன. திருப்பூர் சரக கைத்தறி துறை உதவி இயக்குனர் கவிதா, கோவை மண்டல கோ -ஆப்டெக்ஸ் மேலாளர் ஜெகநாதன் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர். கைத்தறியில் துணி நெய்வது போன்ற செல்பி பாய்ன்ட் அமைக்கப்பட்டிருந்தது. இதில் நின்று, பலரும், தறி நெய்வது போன்று செல்பி எடுத்துக் கொண்டனர். கைத்தறியில் உற்பத்தி செய்யப்பட்ட லினென், மென்பட்டு சேலைகள், சிறப்பு காட்டன் சேலைகள், பெட்ஷீட், ஜமுக்காளம், துண்டுகள், மிதியடி, பருத்தி மற்றும் பட்டு நுாலிழைகளில் தயாரிக்கப்பட்ட சேலை ரகங்கள் இடம்பெற்றிருந்தன. கைத்தறி ரகங்கள், 20 சதவீதம் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டது. ''கைத்தறித்துணிகளை நம் நாட்டு மக்கள் அதிகளவில் வாங்க வேண்டும்; ஏற்றுமதி வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டும்; இதன் மூலம் கைத்தறி நெசவாளர் வாழ்க்கை ஒளிமயமாகும்'' என்று பங்கேற்ற நெசவாளர்கள் கூறினர்.