சொத்து வரிக்கு அபராதம்: கவுன்சிலர்கள் எதிர்ப்பு
அவிநாசி : அவிநாசி பேரூராட்சி கூட்டம் நடந்தது. தலைவர் தனலட்சுமி தலைமை தாங்கினார். செயல் அலுவலர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கவுன்சிலர்கள் விவாதம்:சித்ரா (அ.தி.மு.க.,): வடக்கு ரத வீதியில் சாக்கடை கால்வாய் கட்டும் பணிகள், டிரான்ஸ்பார்மரை மாற்றி அமைக்கும் வேலையால் ஒரு மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. (தினமலர் செய்தியை சுட்டிக்காட்டினார்). நான்கு ரத வீதியிலும் புதைவட கம்பிகள் பதிக்கும் வேலைகள் மிக தாமதமாக நடைபெறுவதால், வணிகர்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.திருமுருகநாதன் (தி.மு.க.,): ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் கட்டி வரும் சொத்து வரியை, திடீரென மாற்றம் செய்து ஆண்டுக்கு இரண்டு முறை என கட்டச் சொன்னால் பொதுமக்கள் சிரமப்படுவர். கட்டத்தவறினால், அபராதம் விதிப்பது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசாணையாக இருந்தாலும் பொதுமக்களின் நலனே முக்கியம்.தங்கவேலு (தி.மு.க.,): முன் அறிவிப்பின்றி சொத்து வரியை இந்த மாதம் கட்ட வேண்டும் எனக் கூறினால், அரசின் மீது பொதுமக்களுக்கு கடும் அதிருப்தி ஏற்படும்.ஸ்ரீதேவி (அ.தி.மு.க.,): பேரூராட்சியை நகராட்சியாக மாற்றம் செய்யும்பொழுது அடிப்படை கட்டமைப்புகள் இல்லாமல் பொதுமக்கள் பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாவர். வரியினங்கள் அதிகரித்து வரும் நிலையில் நகராட்சியாக மாற்றம் செய்தால், இன்னும் அதிகரிக்கும்.கோபாலகிருஷ்ணன் (காங்.,): பேரூராட்சியில், ஐந்து முதல் ஆறு ஆண்டாக அலுவலர்கள் மாறாமல் உள்ளனர். இதனால் பணிகள் தாமதமாகிறது. சொத்து வரியை இரண்டாக பிரித்து இந்த மாத இறுதிக்குள் கட்ட தவறினால், அபராதம் விதிப்பது என்பது பொதுமக்களுக்கு அதிக சுமையை கொடுக்கும். அபராதம் இல்லாமல் செலுத்து செயல் அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கார்த்திகேயன் (தி.மு.க.,): பாரதி வீதியில் வீட்டுக்கு பொருத்தப்பட்டுள்ள பைப்பில் முறையாக தண்ணீர் போய் சேர்வதில்லை. அப்பகுதியில் உள்ள குடிநீர் குழாய்களை பராமரிப்பு செய்து சீரமைக்க வேண்டும்.தேவி (அ.தி.மு.க.,): சீனிவாசபுரம் பகுதியில் எல்.ஐ.சி., ஆபீஸ் அருகில் துவங்கி பெரியகோவில் வரை உள்ள நல்லாற்று பகுதியினை துார்வாரி தண்ணீர் தடையில்லாமல் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.------------------அவிநாசி பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில், 'தினமலர்' நாளிதழில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி, கவுன்சிலர் சித்ரா பேசினார்.
ஆபத்தான 'ரவுண்டானா'
சசிகலா (தி.மு.க.,): சேவூர் ரோட்டில் பண்ணாரி மாரியம்மன் கோயில் அருகில் உள்ள ரவுண்டானா ஆபத்தான முறையில் கட்டப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை சரியான அளவீடுகள் செய்யாமல் அவசர கதியில் ரவுண்டானா பணிகளை அரைகுறையாக செய்துள்ளனர். இதனால் மடத்துப்பாளையம் ரோட்டில் இருந்து வருபவர்களுக்கு சேவூர் ரோட்டில் இருந்து வருபவர்கள் தெரிவதில்லை. அதே போல் சேவூர் ரோட்டில் இருந்து வருபவர்கள் அதி வேகமாக வருவதால் மடத்து பாளையம் பகுதியில் இருந்து வருபவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகும் நிலைமை உள்ளது.