உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கூட்டாற்றை கடக்க பாலம் தேவை! வனத்துறைக்கு மக்கள் கோரிக்கை

கூட்டாற்றை கடக்க பாலம் தேவை! வனத்துறைக்கு மக்கள் கோரிக்கை

உடுமலை; உடுமலை அருகே வனப்பகுதியில் வசிக்கும் மக்களின், மருத்துவ தேவை, விளைபொருட்களை சந்தைப்படுத்த, ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகம், அமராவதி வனசரகத்திற்குட்பட்டது தளிஞ்சி மலைவாழ் குடியிருப்பு. இக்குடியிருப்பில் 150க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியில், இரு மலைத்தொடர்களுக்கு இடையிலுள்ள சமவெளிப்பகுதியில், தேனாற்றில் கிடைக்கும் தண்ணீரை பயன்படுத்தி, 200 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில், மலைவாழ் மக்கள், நெல், பீன்ஸ், மொச்சை உட்பட பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். தங்கள் வாழ்வாதாரமாக உள்ள, விவசாய சாகுபடியில் கிடைக்கும், விளைபொருட்களை சந்தைப்படுத்த, வழித்தடம் இல்லாமல், வேதனையில் உள்ளனர். சமவெளிப்பகுதியான உடுமலை - மூணாறு ரோட்டிற்கு வர, கரடுமுரடான, பாறைகள் நிறைந்த, 6 கி.மீ., துாரத்திற்கான வழித்தடம் மட்டுமே உள்ளது. இந்த வழித்தடத்தில் குறுக்கிடும் கூட்டாற்றில் தண்ணீர் அதிகரித்தால், சமவெளிப்பகுதிக்கு வர முடியாமல், மீண்டும் குடியிருப்பிற்கு சென்று, அங்கிருந்து பல கி.மீ., துாரம் சுற்றி, சம்பக்காடு வழியாக சமவெளிக்கு வர வேண்டிய அவல நிலையில், மலைவாழ் மக்கள் உள்ளனர். மருத்துவ தேவைக்காகவும் இந்த வழித்தடத்தையே மலைவாழ் மக்கள் நம்பியுள்ளனர். அவசர சிகிச்சைக்கு வரும் போது, கூட்டாற்றை கடக்க பரிசலை அப்பகுதி மக்கள் பயன்படுத்துகின்றனர். தண்ணீர் வரத்து அதிகரித்தால், பரிசலையும் பயன்படுத்த முடியாது. அப்பகுதி மக்கள் கூறியதாவது: தளிஞ்சியில் விளையும் விளைபொருட்களை தலைச்சுமையாக சுமந்து சந்தைப்படுத்த எடுத்து வருகிறோம். ஆனால், கூட்டாற்றை கடப்பதில், அபாயம் உள்ளது. எனவே கூட்டாற்றில் பாலம் அமைத்து கொடுத்தால், விளைபொருட்களை எளிதாக எடுத்து செல்வதுடன், அவசர சிகிச்சைக்கு செல்வோருக்கும் பயனளிப்பதாக இருக்கும்.இது குறித்து தேசிய புலிகள் காப்பக ஆணையத்திற்கும் தொடர் மனு அனுப்பி வருகிறோம். இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி