பிளஸ் 1 மாணவரை இறுக்கிய இயற்பியல் தேர்வு
திருப்பூர்: நேற்று நடந்த பிளஸ் 1 இயற்பியல் தேர்வு கடினமாக இருந்ததால், தேர்வெழுதிய மாணவ, மாணவியர் கவலை அடைந்தனர். ஐந்து மதிப்பெண் பகுதியை எழுதவே முடியவில்லை என தெரிவித்தனர்.பிளஸ் 1 பொதுத்தேர்வு கடந்த, 5ம் தேதி முதல் நடந்து வருகிறது. நேற்று இயற்பியல் தேர்வை, 15 ஆயிரத்து, 123 பேர் தேர்வெழுதினர். 129 பேர் தேர்வெழுத வரவில்லை.தேர்வெழுதிய மாணவர்கள் கூறியதாவது:ரோஹித்: ஐந்து மதிப்பெண் பிரிவில் வினாக்கள் கடினமாக இருந்தது. எதிர்பார்த்த கேள்விகள் இடம் பெறவில்லை. ஐந்து மதிப்பெண்ணில் 'பிராப்ளம்' (கணக்கு கேள்வி) கேட்டதில்லை; இம்முறை கேட்டிருந்தனர். ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண்களுக்கு விடை எழுத முடிந்தது; முழு மதிப்பெண் பெறுவது சற்று கடினம்.மவுலிகா: ஐந்து மதிப்பெண் வினா கடினமாக இருந்தது. பாடங்களுக்குள் இருந்து வினாக்கள் இடம் பெறுமென எதிர்பார்க்கவில்லை. ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண் ஓரளவு கை கொடுத்தது. கட்டாய வினா யோசித்து விடை எழுதும் வகையில் இருந்தது.கே.எஸ்.சி., அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பிரியா கூறியதாவது:ஒரு மதிப்பெண், 15ல், 12 எழுதும் வகையில் இருந்தது. மூன்று கேள்விகள் யோசித்து விடை எழுதுவதாக கேட்டிருந்தனர். இரண்டு, மூன்று மதிப்பெண் வினாக்களுக்கு விடை எழுதியிருக்க முடியும்; கட்டாய வினா பரவாயில்லை.ஐந்து மதிப்பெண்ணில் பத்தில் ஐந்து எழுத வேண்டும்; மூன்று அல்லது நான்கு கேள்விகள் எளிதாகவும், மற்ற கேள்வி கடினமாக இருந்திருந்தால், தெரிந்திருக்காது; மாணவர்களும் எழுதியிருப்பர். முந்தைய ஆண்டு வினாத்தாளுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு வினாத்தாள் சற்று கடினமாகவே இருந்தது. மெல்ல கற்கும் மாணவரும் தேர்ச்சி அடைவர். ஆனால், சென்டம் எண்ணிக்கை குறையும்.இவ்வாறு அவர் கூறினார். பொருளியல் தேர்வு எளிதாக இருந்தது
பிளஸ் 1 மாணவர்களுக்கான பொருளியல் தேர்வும் நேற்று நடந்தது. 11 ஆயிரத்து, 426 பேரில், 251 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. 11 ஆயிரத்து, 175 பேர் தேர்வெழுதினர்.அரவிந்த் கிருஷ்ணா: முழு மதிப்பெண்களை பெறும் வகையில், ஒரு மதிப்பெண் வினா இருந்தது. கட்டாய வினாவும் ஈஸியாக இருந்தது. ஐந்து மதிப்பெண் வினாக்களுக்கு முழுமையாக விடை எழுத முடிந்தது; எதிர்பார்த்த கேள்விகள் அப்படியே வந்திருந்தது.பிரியதர்ஷினி: பாடங்களுக்கு பின் வழக்கமாக கேட்கப்படும் அதே கேள்விகள் தான மீண்டும் நேற்றைய பொதுத்தேர்வில் கேட்கப்பட்டிருந்தது. முந்தைய பொதுத்தேர்வு வினாத்தாளிலும் இந்த கேள்விகள் அப்படியே உள்ளது. பொருளியலில் முழு மதிப்பெண்களை பெற முடியும்.திருப்பூர், நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர், சிவக்கொழுந்து கூறுகையில், 'பொருளியியல் வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்விகள் ஏற்கனவே பலமுறை முந்தைய வினாத்தாள்களில் கேட்கப்பட்டவை தான். முந்தைய ஆண்டை விட நடப்பாண்டு பொருளியலில் தேர்ச்சி, சென்டம் அதிகரிக்கும்,' என்றார்.