பல்லடம்: பல்லடம் அருகே, தார் சாலை வசதி கேட்டு, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல்லடத்தை அடுத்த, கணபதிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட, சிந்து கார்டன், திருக்குமரன் நகர் மற்றும் கற்பகம் கார்டன் பகுதிகளில், நுாற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் மக்கள், தார் சாலை வசதி கேட்டு, கணபதிபாளையம்- பொங்கலுார் செல்லும் ரோட்டில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களிடம் பேசிய போலீசார், 'உங்கள் கோரிக்கை நியாயமானது என்றாலும், நீங்கள் நடத்தும் சாலை மறியலால் மற்றவர்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, வாகனங்களுக்கு வழிவிடுங்கள்,' என்றனர். இருப்பினும், பொதுமக்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இதனையடுத்து, பி.டி.ஓ. கனகராஜ், பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆறு மாதத்துக்குள் சாலை வசதி செய்து தரப்படும் என்றும், அதுவரை தற்காலிக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியதால், பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். மறியலால், கணபதிபாளையம்- ரோட்டில், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் கூறியதாவது: எங்கள் பகுதியில் குடியிருப்புகள் அமைந்து பல ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், இன்றுவரை சாலை வசதி செய்து தரப்படவில்லை. இதற்காக, ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளோம். ஆனால், அதிகாரிகள் யாருமே இன்று வரை எட்டிக் கூட பார்க்கவில்லை. சாலை வசதியின்றி, மிகவும் அவதிப்படுகிறோம். குறிப்பாக, மழைக்காலங்களில் ரோடு சேறும் சகதியமாக மாறி விடுவதால், வாகனங்களில் செல்வது மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. எத்தனை முறை தான் மனு அளிப்பது என்றே தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.