மேலும் செய்திகள்
சில்லிங் விற்பனையில் போலியும் 'ஆறாய்' ஓடுது!
27-Mar-2025
பல்லடம்: பல்லடம் பகுதியில், மது விற்பனை, குடிசைத் தொழிலாக மாறிவரும் நிலையில், உறக்கத்தில் உள்ள போலீசார் விழிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இன்றைய தலைமுறையினரை கெடுப்பதில், மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் முன்னிலை வகிக்கிறது. இவ்வாறான போதை பழக்கத்தால், இளைஞர்கள் தங்களின் வாழ்க்கையை இழப்பது மட்டுமின்றி, சமுதாயத்தில் நடக்கும் பல்வேறு குற்ற சம்பவங்களுக்கும் காரணமாகின்றனர். மேலும், இது, எதிர்கால சமுதாயத்தை மிகவும் மோசமான பாதைக்கு இழுத்துச் சென்று வருகிறது.தமிழகத்தில் நடைபெற்று வரும் பெரும்பாலான குற்றச்சம்பவங்களுக்கு பின்னணியில் போதைப் பழக்கமே காரணமாக இருக்கிறது. கஞ்சா, மது, கள்ளச்சாராயம் மட்டுமன்றி, மருந்து - மாத்திரைகள், ஊசிகள் மூலம் போதையை தேடும் அளவுக்கு சமுதாயம் சீர்கெட்டுள்ளது. மது கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என்ற கூறிய கடந்த கால அரசு மற்றும் தற்போதைய அரசால் இதை செயல்படுத்த முடியவில்லை. மாறாக, தனியார் மது பார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இவ்வாறு, இளைஞர்கள் பாதை மாறுவதற்கு காரணமாக உள்ள மது பழக்கமானது, தற்போது குடிசைத் தொழிலாகவும் மாறி வருகிறது. அதிலும், குறிப்பாக, நகரப் பகுதிகளை காட்டிலும், கிராமப் பகுதிகளில் முறைகேடாக மது விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது.பல்லடம் அடுத்த, காமநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட, பருவாய் கிராமத்தில், மளிகை மற்றும் வீடுகளில் வைத்தும், மது விற்பனை நடந்து வந்தது, சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது. அதுபோல், பல்லடம் அடுத்த, கேத்தனுார் கிராமத்தில், பேக்கரியுடன் இணைந்து செயல்படும் உணவகம் ஒன்றில், மறைத்து வைத்து மது விற்பனை செய்வதும் வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது. இது குறித்த வீடியோ வெளியாகி இதனை உறுதிப்படுத்தி உள்ளது.ஏற்கனவே, விவசாயம் உட்பட அனைத்து தொழில் துறையிலும் தொழிலாளர் பற்றாக்குறை உள்ளது. தமிழக தொழிலாளர்கள் சிலர் மதுவுக்கு அடிமையாகி வருவதால், வட மாநிலத் தொழிலாளர்களை நம்பி தொழில் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம். இச்சூழலில், இதுபோல் குடிசைத் தொழிலாக மது விற்பனை நடந்தால், எஞ்சியுள்ள இளைஞர்கள், தொழிலாளர்களும் மதுவுக்கு அடிமையாகி தங்களது எதிர்காலத்தை இழப்பர். எனவே, துாக்கத்தில் உள்ள போலீசார் இனியாவது விழித்து, முறைகேடாக நடக்கும் மது விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர், பல்லடம் வட்டார பொதுமக்கள்.
27-Mar-2025