உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  8 லட்சம் ரேஷன் கார்டுதாரருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு

 8 லட்சம் ரேஷன் கார்டுதாரருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், 8 லட்சத்து 2 ஆயிரத்து 200 கார்டுதாரர்கள், பொங்கல் பரிசு தொகுப்பு பெறும் பயனாளிகளாக உள்ளனர். பயனாளிகளுக்கு வழங்க, இலவச வேட்டி - சேலை வரத் துவங்கிவிட்டது. தமிழக அரசு சார்பில், ஆண்தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு, கரும்பு, பச்சரிசி, சர்க்கரை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி - சேலை வழங்கப்பட்டு வருகிறது. வரும் 15ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ரேஷன் கடைகள் வாயிலாக, பரிசு தொகுப்பு வழங்குவதற்கான பணிகள் துவங்கியுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும், பரிசு தொகுப்பு பெறும் கார்டுதாரர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில், மொத்தம் 1,135 ரேஷன் கடைகள் உள்ளன; 8 லட்சத்து 20 ஆயிரத்து 97 கார்டுதாரர் உள்ளனர். அரிசி பெறும் கார்டுதாரர் 8 லட்சத்து 1,878 பேர்; இலங்கை தமிழர் 322 பேர் என, 8 லட்சத்து 2,200 கார்டு தாரர்கள், வரும் 2026ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு பெறும் பயனாளிகளாக உள்ளனர். பண்டிகை நெருங்கும் நிலையில், மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட இலவச வேட்டி - சேலைகளும் வந்துகொண்டிருக்கின்றன. அவை, அந்தந்த ரேஷன் கடைகளுக்கு, அனுப்பப்பட்டு வருகிறது. பரிசு தொகுப்பாக வழங்க அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களும், கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. கூட்டுறவு துறையினர், விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்வதற்கான பணிகளை துவக்கியுள்ளனர். வழங்கல் பிரிவு அலுவலர்கள் கூறுகையில், 'பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் 8 லட்சம் கார்டுதாரருக்கு மேல் பரிசு தொகுப்பு பெறும் பயனாளிகளாக உள்ளனர். பயனாளிகளுக்கு வழங்க இலவச - வேட்டி சேலைகள் வரத் துவங்கிவிட்டன. அரசு அறிவிப்பு வந்து உடன், பயனாளிகளுக்கு வழங்கப்படும்' என்றனர். ரொக்கம் உண்டா! வரும் 2026ல் சட்டசபை தேர்தல் நடக்கிறது. வரும் பொங்கல் பரிசு தொகுப்பில், ரொக்கம் நிச்சயம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை