உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசுப் பள்ளியில் மின் இணைப்பு துண்டிப்பு: கம்ப்யூட்டர் வகுப்பில் மாணவர்கள் அவதி

அரசுப் பள்ளியில் மின் இணைப்பு துண்டிப்பு: கம்ப்யூட்டர் வகுப்பில் மாணவர்கள் அவதி

சேவூர்:அவிநாசி ஒன்றியம், வேட்டுவபாளையம் ஊராட்சியில், நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், 90 மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியில், ஹைடெக் கம்ப்யூட்டர் ஆய்வகம் அமைக்கப்பட்டு, 10 கம்ப்யூட்டர் ஒதுக்கப்பட்டது. இதற்காக மும்முனை மின்சார இணைப்பு கேட்டு, ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் வாயிலாக மின்வாரியத்துக்கு டெபாசிட் தொகை செலுத்தப்பட்டது. கம்ப்யூட்டர் ஆய்வகத்துக்கு மின் இணைப்பு கொடுக்க ஒயரிங் பணிகள் நடந்தன. அதில், பள்ளிக்கு வெளியில், ஏற்கனவே ஒருமுனை மின்சாரம் கொடுக்கப்பட்டிருந்த மின் பெட்டிக்கு அருகிலேயே புதிதாக பொருத்தப்பட்ட மீட்டர் பாக்ஸை சற்று தள்ளி மழை மற்றும் வெயில் படாதவாறு பாதுகாப்பாக இருக்க பள்ளி நிர்வாகம் மாற்றி அமைத்தது. ஆனால், மின்வாரியத்தினர் ஏற்கனவே இருந்த இடத்தில் தான் மீட்டர் பாக்ஸ் அமைக்க வேண்டும். புதிதாக மாற்றி அமைத்ததற்கு கூடுதல் டிபாசிட் செலுத்த வேண்டும். கூடுதல் தொகை கட்டினால் மட்டுமே மின் இணைப்பு கொடுக்கப்படும் என கொடுக்கப்பட்டிருந்த மின் இணைப்பை துண்டித்தனர். மாணவர்கள் கடந்த ஒரு மாதமாக கம்ப்யூட்டர் பாடத்திட்டத்தை படிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். மின் இணைப்பு இல்லாததால், ஆர்.ஓ., பிளான்ட் மூலம், தண்ணீர் குடிக்க முடியாமல், உப்புத்தண்ணீரை மாணவர்கள் அருந்தும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால், பல மாணவர்களுக்கு சளி, காய்ச்சல் ஆகிய உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகிறது. மின் இணைப்பு பிரச்னை குறித்து, பள்ளி தலைமையாசிரியை ஈஸ்வரி பல முறை சேவூர் மின்வாரிய உதவி பொறியாளர் பழனிசாமியிடம் தெரிவித்தும் இணைப்பு வழங்கவில்லை. மின் வாரிய உதவி பொறியாளர் பழனிசாமியிடம் கேட்டபோது, ''எங்களிடம் எந்த தகவலும் அளிக்காமல் அவர்களாகவே மின்பெட்டியை மாற்றி உள் பக்கமாக அமைத்துள்ளனர். மின் பெட்டியை மாற்றி அமைக்க முறையாக மின்வாரியத்திடம் விண்ணப்பம் ஆன்லைன் மூலம் பதிவு செய்து அதன் பின்னரே மாற்ற வேண்டும். தற்போது டெபாசிட் தொகையை கட்டி விடுவதாக கூறியுள்ளனர். அதன்பின், உடனடியாக மின் இணைப்பு வழங்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ