மாணவர்களை ஊக்குவித்த ஆசிரியர்களுக்கு பாராட்டு
உடுமலை: குப்பம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் உடல்நலத்திலும் கவனம் செலுத்திய ஆசிரியர்களுக்கு, பெற்றோர் பாராட்டு தெரிவித்தனர்.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 28ம் தேதி துவங்கியது. குப்பம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில், பொதுத்தேர்வுக்கு முன்பாகவே மாணவர்களை தயார்படுத்தும் வகையில் தொடர்ந்து சிறப்பு வகுப்புகளை ஆசிரியர்கள் நடத்தினர்.அவ்வாறு மாணவர்கள் கூடுதல் நேரம் படிப்பதற்கு, அவர்களின் உடல்நலத்தை மேம்படுத்திக்கொள்வதற்கு மாணவர்களுக்கு சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன. பள்ளி தலைமையாசிரியர் ராஜேந்திரன் தலைமையில், ஆசிரியர்கள் மலர் முருகன், கிருஷ்ணன் சிறப்பு வகுப்புகளை ஒருங்கிணைத்தனர்.மாணவர்களுக்கு ஒவ்வொரு நாளும் பல்வேறு சுவை உணவுகள், உடல் வெப்பத்தை தவிர்க்கும் மோர், தர்பூசணி என வழங்கி, சிறப்பு வகுப்புகளில் மாணவர்களை ஊக்குவித்தனர்.பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில், மாணவர்களுக்கு சிற்றுண்டிக்கான ஏற்பாடு செய்யப்பட்டது. ஆசிரியர்களின் இம்முயற்சிக்கு பள்ளி மேலாண்மைக்குழுவினர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பெற்றோர் பாராட்டு தெரிவித்தனர்.