தைப்பூச விழா முன்னேற்பாடு; முருக பக்தர்கள் எதிர்பார்ப்பு
பல்லடம்; அடுத்த மாதம், பழனியில் தைப்பூச விழா கொண்டாடப்பட உள்ளது. விழாவில் பங்கேற்பதற்காக, பக்தர்கள் முன்கூட்டியே விரதம் இருந்து, பாதயாத்திரை செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.அவ்வகையில், கோவை, நீலகிரி மாவட்ட பகுதிகளில் இருந்து பாதயாத்திரை செல்லும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள், பல்லடம்- - தாராபுரம் சாலையை பயன்படுத்தி பழனி செல்வது வழக்கம். ஆயிரக்கணக்கான பக்தர்கள், தாராபுரம் ரோட்டை பாதயாத்திரை செல்ல பயன்படுத்துவர். பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் உள்ளன. பாத யாத்திரை செல்லும் பெண்கள், வயதானவர்கள் உள்ளிட்டோர், அடிப்படை தேவைகளுக்காக மிகவும் சிரமப் படுகின்றனர். மேலும், போக்குவரத்து நிறைந்த தாராபுரம் ரோட்டில், இரவு நேரங்களில், விபத்து அபாயம் உள்ளது. பாதயாத்திரை செல்லும் வழித்தடத்தில், ஊராட்சி நிர்வாகங்களின் ஒத்துழைப்புடன், குடிநீர், தெருவிளக்கு, கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.