மழைக்கால பேரிடர்கள் எதிர்கொள்ள ஆயத்தம்
மாவட்டம் முழுவதும் பரவலாக வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. மழைக்கால பேரிடர்களை எதிர்கொள்ள, அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து, தேவையான ஆயத்த பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. இதுவரை 130.33 மி.மீ., மழை
தலைமை வகித்த கலெக்டர்கிறிஸ்துராஜ்:மாவட்டத்தின் ஆண்டு இயல்பான மழை அளவு, 61.82 மி.மீ., கடந்த 2021ல், 301.25 சதவீதமும்; 2022 ல், 231.65 சதவீதம் இயல்பைவிட அதிக மழை பெய்தது. கடந்த 2023ம் ஆண்டில், இயல்பைவிட 64.47 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது.மாவட்டத்தின் இயல்பான வடகிழக்கு பருவமழை அளவு, 314.30 மி.மீ., கடந்த 2021 ல் 54.72 மி.மீ., - 2022ல், 849.85 மி.மீ., - 2023 ல், 329.45 மி.மீ.,க்கு வடகிழக்கு மழை பெய்தது. நடப்பு வடகிழக்கு பருவத்தில் இதுவரை, மாவட்டத்தில் 130.33 மி.மீ., மழை பெய்திருக்கிறது. 'ரெட் அலர்ட்' எப்போது?
பிரதான அணைகளான திருமூர்த்தியில் நீர்மட்டம் 47.39 அடியாகவும்; அமராவதியில் 83.67 அடியாக உள்ளது. திருமூர்த்தியில் 50 அடியை எட்டும்போது முதல் கட்ட அபாய எச்சரிக்கையும், 56 அடியை எட்டும்போது 'ரெட் அலர்ட்'டும் கொடுக்க வேண்டும். அமராவதியில் 88 அடியை எட்டும்போது'ரெட் அலர்ட்' கொடுக்கப்படுகிறது.மாவட்டத்தில் 41 இடங்கள் மழை பாதிப்புக்கு உள்ளாக வாய்ப் புள்ளவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. மழையால் குடியிருப்பு பகுதிகளில் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் மக்களை தங்க வைப்பதற்காக, திருப்பூர் வடக்கு தாலுகாவில் 11; திருப்பூர் தெற்கில் 13; பல்லடத்தில், 6; அவிநாசியில் 8; ஊத்துக்குளியில் 5; தாராபுரத்தில், 1; உடுமலை, மடத்துக்குளத்தில் தலா 4 என, மொத்தம் 52 நிவாரண முகாம்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன. பேரிடர் ஏற்பட்டால் அரசு துறையினருடன் இணைந்து செயல்படுவதற்கு, 644 ஆண்கள்; 33 பெண்கள் என, 677 தன்னார்வலர்கள் முன்வந்துள்ளனர். நீச்சல் வீரர்கள் 243 பேர்; 150 பாம்புப்பிடி வீரர்கள் உள்ளனர்.மரம்வெட்டும் கருவிகள்,ஜே.சி.பி., இயந்திரங்கள் போதுமான எண்ணிக்கையில் உள்ளன. ஒவ்வொரு ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் தட்டுப்பாடு இன்றி வினியோகிக்கும் வகையில், இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தயாராகின்றன 'ட்ரோன்'கள்
எஸ்.பி., அபிஷேக் குப்தா:மழைக்காலத்தில், குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ வாய்ப்பு உள்ளது. நெருக்கடியான சூழலில், 'ட்ரோன்களை' பயன்படுத்தினால், பாதிக்கப்பட்ட பகுதியில் நிலை குறித்து சுலபமாக தெரிந்துகொள்ளலாம். அதற்கேற்ப மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள முடியும். 'ட்ரோன்' இயக்க பயிற்சி பெற்றோர் பட்டியல் தயாரித்து, அவர்களை தயார்படுத்த வேண்டும். எத்தகைய சூழலிலும், பேரிடரில் சிக்கியவர்கள், கட்டுப்பாட்டு மையங்களை தொடர்புகொண்டு தகவல் அளிக்க, தடையில்லாத தொலை தொடர்பு அவசியம். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டாலும், மொபைல் போன்களை சார்ஜ் செய்ய, 'பவர்பேங்க்' போதுமான அளவு வைத்திருக்க மொபைல் போன் ஷாப்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். பாதிப்பின்றி கடக்க வேண்டும்
அமைச்சர் சாமிநாதன்:வடகிழக்கு பருவமழை காலத்தில், எவ்வித பாதிப்பு ஏற்படாதவாறு கடந்து விடவேண்டும். பேரிடர் கால பணிகளை, அரசு துறையினர் தங்க ளுக்குள் ஒருங்கிணைந்து மேற்கொள்ளவேண்டும். சிறிய தகவலானாலும், உடனடியாக சம்பந்தப்பட்ட துறையினரின் கவனத்துக்கு கொண்டுவர வேண்டும். விழும்நிலையில் உள்ள பள்ளி கட்டடங்களை, இப்போதே இடித்துவிட வேண்டும். தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உடனடியாக சரி செய்ய வேண்டும். அதிகாரிகள் பங்கேற்பு
அமைச்சர் கயல்விழி,மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நிர்மல்ராஜ், டி.ஆர்.ஓ., கார்த்திகேயன் மற்றும் வருவாய், பேரிடர் மேலாண்மை, வேளாண்மை, சுகாதாரம், உள்ளாட்சி துறை, நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.பேரிடருக்கு உள்ளாகும் பகுதிகளில், ட்ரோன்களை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தடையில்லாத தொலை தொடர்பு குறித்து, தொலை தொடர்பு நிறுவனத்தினரை அழைத்துஏற்கனவே ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது; மீண்டும்ஆலோசனை நடத்தப்படும்சோதித்த அதிகாரி; ஏற்கப்படாத அழைப்புபருவமழையை எதிர்கொள்ள மின்வாரியம் தயாராக உள்ளது. தேவையான மின்பொருட்கள் கைவசம் உள்ளன. பேரிடர் காலத்தில் மக்கள் தகவல் தெரிவித்தால், உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்படும் என்றனர், மின்வாரிய அதிகாரிகள். மாவட்ட கண்காணிப்பு அதிகாரி நிர்மல்ராஜ், 'மக்கள் எந்த எண்ணில் மின்வாரியத்தை தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கவேண்டும்' என கேள்வி எழுப்பினார். '94987 94987 என்கிற மின்னகம் எண்ணில் தொடர்புகொள்ளவேண்டும்' என்றனர்,மின்வாரிய அதிகாரிகள்.உடனடியாக தனது மொபைல் போனை எடுத்த நிர்மல்ராஜ், அந்த எண்ணுக்கு அழைத்தார். யாரும் அழைப்பை ஏற்கவில்லை. இதனால், கண்காணிப்பு அலுவலர் அதிருப்தி அடைந்தார். பதில் பேசமுடியாமல் மின்வாரிய அதிகாரிகள் தவித்தனர்.