விளைநிலத்தில் கொட்டப்பட்ட பிரின்டிங் நிறுவன கழிவுகள்
திருப்பூர்,; திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட, தொட்டியமண்ணரையில் இருந்து நல்லாத்துப்பாளையம் செல்லும் ரோட்டில், சில இடங்களில், கழிவுநீர் செல்ல வழியில்லாமல் நீண்ட நாட்களாக தேங்கியுள்ளது. அதே பகுதியில், பிரின்டிங் நிறுவனத்தின் கழிவுகள், திறந்த வெளியில் விளைநிலங்களுக்குள் கொட்டப்பட்டுள்ளது.இரவு நேரத்தில், கழிவுகளை கொட்டி சென்றுள்ளனர். பிரின்டிங் இங்க் வரும் பக்கெட்கள் மற்றும் கழிவுகள் ரோட்டோரமாக கொட்டப்பட்டுள்ளன. மழை பெய்யும் போது, மழைநீரில் கலந்து பிரின்டிங் 'இங்க்' நிலத்தில் வடியவும் வாய்ப்புள்ளது.அப்பகுதியினர் கூறுகையில், 'பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாமென, அரசு நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. மக்கும் குப்பை, மக்காத குப்பை என, பிரித்து வாங்க வேண்டுமென, மாநகராட்சி அலுவலர்கள் கூறுகின்றனர்.திடக்கழிவு மேலாண்மையில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நேரத்தில், பிரின்டிங் நிறுவனத்தின் கழிவுகளை, திறந்த வெளியில் கொட்டிச்சென்றது அதிர்ச்சியாக இருக்கிறது. மாநகராட்சி நிர்வாகமும், மாசுக்கட்டுப்பாடு வாரியமும் கூட்டாய்வு நடத்தி, இத்தகைய விதிமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்,' என்றனர்.