விதைப்பண்ணைகளில் பாரம்பரிய நெல் ரகங்களை உற்பத்தி செய்யுங்க! தரமான, தேவை அதிகமுள்ள ரகங்களுக்கு முன்னுரிமை
உடுமலை: நெல் விதைகளில் தேவை அதிகமுள்ள, சன்ன, மிக சன்ன நெல் ரகங்களும், துாயமல்லி, சிவன் சம்பா போன்ற பாரம்பரிய ரகங்களும் தேவைக்கு ஏற்ப அரசு மற்றும் தனியார் விதை பண்ணைகளில் உற்பத்தி செய்ய விதைச்சான்றுத்துறை இணை இயக்குனர் அறிவுறுத்தினார்.மடத்துக்குளம் வட்டாரத்தில், சம்பா சாகுபடி பருவத்தில், அமராவதி பழைய, புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளில், ஆதார நிலை மற்றும் சான்று நிலை விதைப்பண்ணைகளை, விதை சான்றளிப்பு மற்றும் அங்கக சான்றளிப்புத்துறை இணை இயக்குனர் தபேந்திரன் ஆய்வு செய்தார்.பின்னர் அவர் கூறியதாவது:பயிர் சாகுபடிக்கு, விதை, நீர்ப்பாசனம், உரம், பூச்சிமருந்து ஆகிய இடுபொருட்கள் முக்கியமானதாக இருந்தாலும், அடிப்படை ஆதாரம் விதைத்தேர்வு ஆகும். விதையை தேர்வு செய்வதில் தவறினால், முழுமையான சாகுபடியும் பாதிக்கும்.தரமான சான்று பெற்ற விதைகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வினியோகம் செய்வதில், விதைச்சான்றுத்துறை கவனம் செலுத்தி வருகிறது.மடத்துக்குளம் வட்டாரத்தில், சம்பா பருவத்தில், அமராவதி புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனத்தில், ஏறத்தாழ, 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.அரசு மற்றும் தனியார் விதை உற்பத்தியாளர்கள் தரமான சான்று பெற்ற விதைகளை உற்பத்தி செய்யும் வகையில், நெல் விதைப்பண்ணைகள் அமைத்துள்ளனர்.இங்கு, பூப்பருவம், முதிர்ச்சிப்பருவங்களில் விதைச்சான்று அலுவலர்களால் வயலாய்வு மேற்கொள்ளப்பட்டு, பிற ரக கலவன்கள் கணக்கீடு செய்து, வயல் தரத்தில் தேறும் விதைப்பண்ணைகள் மட்டும் அறுவடைக்கு அனுமதிக்கப்படும்.பின்னர், அரசு அனுமதி பெற்ற விதை சுத்தி நிலையங்களில், துாய்மை செய்து, விதை குவியல்கள் உரிய ஆய்வுகள் செய்யப்பட்டு, சான்றட்டை பொருத்தப்பட்டு, விவசாயிகளுக்கு விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகிறது.மடத்துக்குளம் அருகேயுள்ள பாப்பான்குளம், அரசு விதைப்பண்ணையில், 20.63 ஏக்கர் பரப்பளவில், கோ-55, கோ-51, ஏ.டி.டி.,-54 ஆகிய ஆதார நிலை விதைப்பண்ணைகளும், துாயமல்லி, சிவன் சம்பா போன்ற பாரம்பரிய நெல் விதைப்பண்ணைகள் தற்போது, வளர்ச்சியடைந்து பூப்பருவத்தில் உள்ளது.இங்கு உற்பத்தி செய்யப்படும் நெல் விதைகள், தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.அரசு மற்றும் தனியார் விதைப்பண்ணைகள், விதை சுத்தி நிலையங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பகுதிகளில், அரசு மற்றும் தனியார் விதை உற்பத்தியாளர்களால், கோ-51, கோ-55, உமா, ஜோதி, ஏ.டி.டி.,-54, 57 ரகங்களில் விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளது.விதை உற்பத்தியாளர்களிடம், தற்போது சன்னம் மற்றும் மிக சன்ன ரக விதைகளுக்கான தேவை அதிகரித்துள்ளதால், அத்தகையன நெல் ரகங்களின் விதைகளை உற்பத்தி செய்ய வேண்டும்.புதிய ரகங்களின் தேவை பட்டியலை பெற்று, உற்பத்தியாளர்களுக்கு வழங்கி, தரமான, தேவை அதிகமுள்ள நெல் ரகங்கள் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.ஆய்வின் போது, திருப்பூர் மாவட்ட விதைச்சான்றளிப்பு துறை உதவி இயக்குனர் மணிகண்டன், வேளாண் உதவி இயக்குனர் தேவி, விதைச்சான்று அலுவலர்கள், விதை உற்பத்தியாளர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.