மேலும் செய்திகள்
வரி உயர்வுக்கு எதிராக வியாபாரிகள் போர்க்கொடி
08-Dec-2024
திருப்பூர்: அனைத்து வியாபாரிகள் சங்க பேரவை நிர்வாகிகள், சொத்துவரி உயர்வு மற்றும், 18ம் தேதி கடையடைப்பு போராட்டம் குறித்து, துண்டு பிரசுரம் வாயிலாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.திருப்பூர் மாநகராட்சியின் சொத்துவரி உயர்வு மற்றும் வாடகைக்கு, 18 சதவீத வரி விதிப்பை கண்டித்து, திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்க பேரவை சார்பில், தொடர் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 8ம் தேதி முதல், அனைத்து கடைகளின் முன் கருப்புக்கொடி கட்டி, தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். துண்டுப்பிரசுரங்கள்
பொதுமக்களுக்கு, சொத்துவரி உயர்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 5 ஆயிரம் துண்டு பிரசுரங்கள் அச்சடித்து, கடைகளில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சி மற்றும் திருப்பூர் மாநகராட்சியில் உள்ள, சொத்துவரி விவரம் அச்சிட்ட மற்றொரு துண்டு பிரசுரமும் வினியோகம் செய்யப்படுகிறது.பெரும்பாலான சொத்துவரி இனங்கள், கோவை மாநகராட்சியை காட்டிலும் திருப்பூரில் அதிகமாக இருப்பதாக குறிப்பிட்டு காண்பித்துள்ளனர். மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், வரும் 18ம் தேதி, ஒரு நாள் கடையடைப்பு போராட்டமும் அறிவித்துள்ளனர். மாநகராட்சி 'அமைதி'
குறிப்பாக, சொத்துவரி உயர்வு மற்றும் வாடகைக்கு, 18 சதவீத ஜி.எஸ்.டி., விதிக்கப்படும் போது, அதிகரிக்கும் வரிச்சுமை தொடர்பாக, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். கோவை மாநகராட்சியை காட்டிலும் திருப்பூரில் வரிவிதிப்பு அதிகம் என, வணிகர்கள் பிரசாரம் செய்கின்றனர்.மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து அமைதி காப்பது, குற்றச்சாட்டை ஊர்ஜிதம் செய்வதாக உள்ளது என்று அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன. கட்சிகள் ஆதரவு
அனைத்து வியாபாரிகள் சங்க பேரவையின் போராட்டத்துக்கு, பெரும்பாலான அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. குறிப்பாக, போராட்டத்தை ஆதரிக்கும் வகையில், அ.தி.மு.க., சார்பில், 16ம் தேதி முதல் 18ம் தேதி முடிய, தங்களது கட்சியினர் வீடு மற்றும் நிறுவனங்கள், கடைகளில் கருப்புக்கொடி ஏற்றி வைக்க, மாவட்ட செயலாளர் அறிவுறுத்திஉள்ளார்.
08-Dec-2024