சொத்து வரி மறு சீராய்வு 2 மாதமாக நிறுத்திவைப்பு
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி மறுசீராய்வு கடந்த இரு மாதங்களாக நடைபெறவில்லை. இதுவரை, ஏறத்தாழ 3 லட்சம் வரி விதிப்புகளில் 4 ஆயிரம் வரி விதிப்புகளில் மட்டுமே இதுவரை வரியினம் அதிகரித்துள்ளது.தமிழகம் முழுவதும் கடந்த 2022-23ம் நிதியாண்டில் உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி உயர்வு அமலானது. அரசு வழிகாட்டுதலின் பேரில் 25 முதல் 150 சதவீதம் வரை, குடியிருப்பு, வணிக மற்றும் தொழிற்சாலை கட்டடங்களுக்கு வரி உயர்வு ஏற்படுத்தப்பட்டது. வரி உயர்வு கடந்த செப்., மாதம் முதல் மேலும் 6 சதவீதம் அதிகரிக்கப்பட்டது.திருப்பூர் மாநகராட்சியில் இந்த சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை அனைத்து கட்சியினர் தரப்பிலும் எழுந்தது. மாநகராட்சி மன்ற கூட்டத்தில் இப்பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. அ.தி.மு.க., தரப்பில் போராட்டம்; தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள கம்யூ., - காங்., உள்ளிட்ட கட்சியினர் போராட்டம்; பா.ஜ., போராட்டம் என இது நீண்டது. மேலும் வியாபாரிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே திருப்பூர் எம்.பி., சுப்பராயன், தெற்கு எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் ஆகியோர் சொத்து வரி பிரச்னை குறித்து முதல்வர், துறை அமைச்சர் மற்றும் உரிய துறை அதிகாரிகளிடம் கோரிக்கையும் விடுத்தனர். இருப்பினும் இந்த பிரச்னை நீங்காமல் உள்ளது. வரி விதிப்புகள்
திருப்பூர் மாநகராட்சியில் தற்போதைய நிலவரப்படி, 2,46,475 வீட்டு வரிகள் உள்ளன. மேலும் 15,318 தொழிற்சாலை கட்டடங்கள்; 11,242 வணிக பயன்பாட்டுக்கு கட்டடங்கள்; 14 கல்வி நிறுவனங்கள் மற்றும் 1050 அரசு துறை கட்டடங்களுக்கான சொத்து வரி விதிப்புகள் உள்ளன.இந்த வரி விதிப்புகள் வாயிலாக அரையாண்டு வரியினமாக 134 கோடி ரூபாய் வசூலாக வேண்டும்.இதில் 50 ரூபாய் வரையிலான வரியில் 5048 கட்டடங்கள் உள்ளன. இவற்றின் மூலம் 3.65 லட்சம் ரூபாய் வரி வசூலாகிறது.மேலும் 51 முதல் 100 ரூபாய் வரை வரி செலுத்தும் கட்டடங்கள் 28,164 உள்ளன. இவற்றின் மூலம் 43.21 லட்சம் ரூபாய் வரி பெறப்படுகிறது.அடுத்து 101 முதல் 200 ரூபாய் வரை வரி செலுத்தும் கட்டடங்கள் 34,125 ஆகும். இவை ஒரு கோடி ரூபாய் வரி செலுத்துகின்றன. அதே போல 201 முதல் 500 ரூபாய் வரை, 61,268 கட்டடங்கள் வாயிலாக 4 கோடி ரூபாய்; ஆயிரம் ரூபாய் வரை செலுத்தும் 51,268 கட்டடங்கள் வாயிலாக 7 கோடி ரூபாய் வரி வசூலாகிறது. மேலும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் வரி செலுத்தும் 93,506 கட்டடங்கள் 121 கோடி ரூபாய் வரியை செலுத்துகின்றன. மாற்றம் செய்யப்பட்டவை
மாநகராட்சி பகுதியில், பயன்பாடு மாறாத கட்டடங்கள், விரிவாக்கம் செய்யப்பட்டது கண்டறிந்து அதற்குரிய வரி விதிப்பு மேற்கொள்ளப்பட்டது. அவ்வகையில் 353 கட்டடங்கள் சதுரடி பரப்பு அடிப்படையில் வரி விதிப்பு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி ஏறத்தாழ 89 லட்சம் ரூபாய் வரியினம் அதிகரித்துள்ளது.அதே போல், பயன்பாடு மாற்றம் செய்யப்பட்ட கட்டடங்கள் என்ற வகையில் 735 கட்டடங்கள் வரி விதிப்பு மேற்கொள்ளப்பட்டதில் 2.44 கோடி ரூபாய் வரியினம் அதிகரித்துள்ளது. மேலும், மின் பயன்பாடு, ஜி.எஸ்.டி., பதிவு போன்றவற்றின் அடிப்படையில் ஏறத்தாழ 3,200 கட்டடங்களுக்கு வரி விதிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்த கணக்குகளின் அடிப்படையில், ஏறத்தாழ 3 லட்சம் வரி விதிப்புகளில் 4 ஆயிரம் வரி விதிப்புகள் மட்டுமே இதுவரை வரியினம் அதிகரித்துள்ளது. எவற்றில் ஆய்வு?
பெரும்பாலும் வரி விதிப்பு கட்டடம் மறு சீராய்வின் போது, வரியினங்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கடந்த இரு மாதமாக இந்த மறு சீராய்வு பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த கட்டடங்களும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் சொத்து வரி செலுத்தும் தொழில் மற்றும் வணிக கட்டடங்களாக தேர்வு செய்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.