மாநகராட்சி ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்: மழை பாதிப்பு எதிர்கொள்ள தயார்
திருப்பூர், : மழையால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய மாநகராட்சி ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன. வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. திருப்பூரில் மாவட்ட நிர்வாகம் மழை பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. வருவாய் துறையினர். பேரிடர் மீட்பு துறையினர், தீயணைப்பு துறையினர், போலீசார், உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மழை பாதிப்புகளை எதிர்கொள்ளும் விதமாக தயாராக இருக்கும் வகையில் உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு பணியும் முடுக்கி விடப்பட்டு, அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பல்வேறு பகுதிகளிலும் மழை காலங்களில் பாதிப்புகள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. சீரமைக்கப்படாத ரோடு, துார் வாரப்படாத சாக்கடை கால்வாய், ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்ட நீர் வழிப்பாதை ஆகியவற்றில் மழை பாதிப்புகள் தொடர்கதையாக உள்ளன. தற்போது வடகிழக்க பருவ மழை பாதுகாப்பு முன்னேற்பாடுகளை, மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. மழை பாதிப்புகளின் போது உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் ஊழியர்களுக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டு, பாதிப்புகளை சமாளித்து எதிர்கொள்ளவும், மீட்டு பணிகளை மேற்கொள்ளவும் வசதியாக தேவையான உபகரணங்கள் நான்கு மண்டலங்களுக்கும் வழங்கப்பட்டது. இவற்றை மாநகராட்சி மைய அலுவலகத்தில் மேயர் தினேஷ்குமார், கமிஷனர் அமித் ஆகியோர் வழங்கினர். துணை கமிஷனர் சுந்தரராஜன், பொறியியல் பிரிவினர், சுகாதார பிரிவினர் பங்கேற்றனர்.
வழங்கப்பட்ட உபகரணங்கள்
மழை பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்கள் பயன்பாட்டுக்காக 135 வாக்கி டாக்கி, மரக்கிளைகள் அறுக்கும் இயந்திரம், நீர் அகற்றும் பம்ப் செட், அரிவாள், மண்வெட்டி, காலுறை, கையுறைகள் உட்பட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.