அறநிலையத் துறையை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
பல்லடம்: பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 650 ஏக்கர் இனாம் நிலங்கள், பத்திரப்பதிவு செய்வதற்கு தடை விதிக்கும் வகையில், அறநிலையத்துறை சார்பில், கடிதம் ஒன்று வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில், 650 ஏக்கர் நிலங்களும் பூஜ்ஜிய மதிப்பு செய்யப்பட்டன. இதற்கு, கரைப்புதுார் ஊராட்சி பொதுமக்கள், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று முன்தினம் நடந்த கிராமசபா கூட்டத்தில் பங்கேற்ற அறநிலைலயத் துறை அதிகாரிகளை சிறை பிடித்து, கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். நேற்று, அறநிலையத்துறையை கண்டித்து, அல்லாளபுரம் பகுதியில், கருப்புக் கொடி ஏந்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கூறுகையில், 'அறநிலையத்துறை செயல் அலுவலர், தனிப்பட்ட வெறுப்பு காரணமாக, ஒட்டுமொத்த கரைப்புதுார் கிராம மக்களும் பாதிக்கப்படும் வகையில், பதிவுத்துறைக்கு கடிதம் கொடுத்து, நிலங்களை பூஜ்ஜிய மதிப்பாக்கி உள்ளார். தற்போது, அதை ரத்து செய்ய தனக்கு அதிகாரம் இல்லை என்றும் கூறுகிறார். உரிய ஆவணங்களும் இன்றி, பத்திரப்பதிவு மேற்கொள்ள தடை விதித்தது, சட்ட விரோதமானது. துறை ரீதியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பூஜ்ஜிய மதிப்பாக்கப்பட்ட எங்களது நிலங்கள் மீதான பத்திரப்பதிவு தடையை நீக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.