பாரம்பரியமாக திருவிழா கொண்டாட தடை அறநிலைய துறையை கண்டித்து மறியல்
உடுமலை:உடுமலை அருகே, பாரம்பரியமாக நடக்கும் கோவில் திருவிழாவை நடத்த, அறநிலையத்துறை அதிகாரிகள் கட்டுப்பாடு விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் இரு மாநில இணைப்பு ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே, பள்ளபாளையம், செங்குளம் கரையில், நுாற்றாண்டுகள் பழமையான கருவண்ணராயர் வீரசுந்தரி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் ஒரு சமூகத்தை சேர்ந்த மக்கள் கிடா வெட்டி, பொங்கல் வைத்து பாரம்பரியமாக கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், அறநிலையத்துறை ஆய்வர் சரவணகுமார் நேற்று முன்தினம் கோவிலுக்கு சென்று, 'நான்கு பேர் புகார் அளித்துள்ளனர். எனவே, கிடா வெட்டு உள்ளிட்ட பாரம்பரிய முறையில் இல்லாமல், வார நாட்களில் வழிபடுவது போல எளிமையாக திருவிழா நடத்துங்கள்' என தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த மக்கள் நேற்று, உடுமலை - மூணாறு - திருமூர்த்திமலை செல்லும் ரோட்டில், பள்ளபாளையம் நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டோர் கூறியதாவது: பல நுாற்றாண்டுகளாக பொதுமக்கள் பாரம் பரியமாக கொண்டாடும் விழாவை தடுக்க, அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரமில்லை. நான்கு பேர் புகார் கொடுத்தால், 400 குடும்பங்களுக்கு உரிமைப்பட்ட கோவிலில் முறையாக விசாரணை நடத்த வேண்டும். பாரம்பரிய வழக்கப்படி திருவிழா கொண்டாட அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். உடுமலை டி.எஸ்.பி., நமச்சிவாயம், பிரசன்ன விநாயகர் கோவில் செயல் அலுவலர் சுந்தரவடிவேல் மற்றும் அதிகாரிகள் பேச்சு நடத்தி, பாரம்பரிய முறைப்படி, திருவிழா நடத்தி கொள்ள அனுமதி அளித்தனர். இதையடுத்து, காலை, 7:00 மணிக்கு துவங்கிய மறியல் போராட்டம், 10:00 மணிக்கு நிறைவடைந்தது. மூன்று மணி நேரம் ஸ்தம்பித்த போக்குவரத்து பின் இயல்பானது.