பிற மாநில குழந்தைகளை அழைத்து வர போக்குவரத்து வசதி செய்யுங்க
உடுமலை; அரசுப்பள்ளிகளுக்கு பிற மாநில குழந்தைகளை அழைத்து வருவதற்கு, போக்குவரத்துக்கான நிதிஒதுக்கீடு வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில், பிற மாநிலத்திலிருந்து இடம் பெயர்ந்து வருவோர் பலரும் பணி செய்கின்றனர். அவர்களின் குழந்தைகள், அந்த தொழிற்சாலைகளுக்கு அருகில் உள்ள அரசுப்பள்ளிகளில் படிக்கின்றனர். வங்கதேசம், ஒடிசா, ராஜஸ்தான் உட்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து, தங்களின் வாழ்வாதாரத்திற்காக தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பணிக்கு வருகின்றனர். பொருளாதாரம் உட்பட அனைத்திலும், பிற மாநில குழந்தைகள் மிகவும் பின்தங்கி இருப்பதால், அவர்களுக்கான அடிப்படை கல்வி அரசு பள்ளிகளின் வாயிலாக வழங்குவதற்கு, அரசு நடவடிக்கை எடுக்கிறது. இவ்வாறு பிற மாநில குழந்தைகளுக்கென, நடப்பாண்டில் அரசுப்பள்ளிகளில் 'தமிழ் மொழி கற்போம்' மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் 15 மையங்களில் 334 பிற மாநில மாணவர்கள் படிக்கின்றனர். குறிப்பிட்ட கிராமங்களுக்கு மையமாக, ஒரு அரசு பள்ளியில் இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிற மாநில குழந்தைகள், பல்வேறு பகுதிகளில் இருப்பதால் பள்ளி நிர்வாகத்தினர் போக்குவரத்துக்கான வசதி ஏற்படுத்தி, அவர்களை அழைத்து வருகின்றனர். இருப்பினும் நுாறு சதவீதம் பிற மாநில குழந்தைகள் பள்ளிகளுக்கு வருவதில்லை. அனைத்து மாணவர்களையும் அழைத்து வருவதற்கு, போக்குவரத்து வசதி அடிப்படை தேவையாக உள்ளது. பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: பிற மாநில குழந்தைகள் தற்போது ஆர்வமுடன் பள்ளிக்கு வர துவங்கியுள்ளனர். ஆனால் பள்ளியிலிருந்து தொலைதுாரம் உள்ள தொழிற்சாலைகளிலிருந்து, இதுபோன்ற பிற மாநில குழந்தைகள் வருவதற்கு தயங்குகின்றனர். பள்ளிக்கு அருகிலுள்ள பகுதிகளிலிருந்து, இக்குழந்தைகளை அழைத்து வருவதற்கே சராசரியாக மாதத்திற்கு நான்காயிரம் ரூபாய் வரை ஆகிறது. பிற மாநில குழந்தைகளை அழைத்து வருவதற்கென அரசு குறிப்பிட்ட நிதிஒதுக்கீடு செய்வதால் கூடுதல் மாணவர்களை சேர்க்க முடியும். இவ்வாறு கூறினர். இது தொடர்பாக, தமிழக அரசும், கல்வித்துறையினரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.