பாலுாட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்
திருப்பூர் ; தாராபுரத்தில் நேற்று நடைபெற்ற ஊட்டச்சத்து உறுதி செய்யும் திட்டம் இரண்டாவது கட்ட நிகழ்ச்சியில், பாலுாட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.ஊட்டச்சத்து உறுதி செய் திட்டத்தில், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக கண்டறியப்படும் குழந்தைகளின், பாலுாட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது.இந்த திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின், அரியலுாரில் நேற்று துவக்கிவைத்தார். திருப்பூர் மாவட்டத்தில், தாராபுரம், சித்தராவுத்தன்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி அங்கன்வாடி மையத்தில் விழா நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார்.ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு, ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கி, அமைச்சர் கயல்விழி பேசுகையில், ''தேசிய ஊட்டச்சத்து குழுமத்தின், போஷான் அபியான் திட்டத்தில், ஊட்டச்சத்து குறைபாடில்லாத நிலையை எட்டும் நோக்கில், ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது.திருப்பூர் மாவட்டத்தில், கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 355 குழந்தைகளுக்கு, இரண்டு ஊட்டச்சத்து பெட்டகமும்; மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 881 குழந்தைகளுக்கு ஒரு ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது,'' என்றார். மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மகாலட்சுமி நன்றி கூறினார்.