ஆற்றுப்பாலத்தை சீரமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்
உடுமலை: அமராவதி ஆற்றுப்பாலத்தில் தடுப்புச்சுவர்களை சீரமைக்க, நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றுப்பாலம் உள்ளது. இப்பாலத்தின் வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இங்கு பாலத்தின் தடுப்பு சுவர்கள் சேதமடைந்துள்ளன. ஆனால், பிரதிபலிப்பான், மின்விளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில், இரு சக்கர வாகன ஓட்டுனர்கள், பாதசாரிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, இப்பாலத்தினை சீரமைத்து, இவற்றை பொருத்த, நெடுஞ்சாலைத்துறையினரும், மடத்துக்குளம் பேரூராட்சியினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.