செஞ்சேரிமலையில் குப்பை மலை பொதுமக்கள் கடும் அதிருப்தி
பல்லடம்: சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட செஞ்சேரிமலை சுற்றுவட்டாரத்தில் பிரசித்தி பெற்றது. இயற்கை சூழலுக்கு இடையே, ஆன்மிக மணம் வீசக்கூடிய இந்த மலையை ஒட்டி, குப்பை குவித்து வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:வரலாற்று சிறப்புமிக்க செஞ்சேரிமலை கோவிலுக்கு தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்த மலையை ஒட்டி ஆரம்ப சுகாதார நிலையம், கடைகள் உள்ளிட்டவை உள்ளன.கோவில் மலையடிவாரத்தில், ஆரம்ப சுகாதார நிலையத்தை ஒட்டி, ஊராட்சி குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. இது குறித்து பலமுறை தெரியப்படுத்தியும் ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் உள்ளது.இதனால், செஞ்சேரி மலைக்கு இணையாக குப்பை மலை உருவாகி வருகிறது. இதனால், துர்நாற்றத்துடன், நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது. கோவிலை ஒட்டி குவிந்துள்ள குப்பை மலையை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், விரைவில் இது தொடர்பான போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.