பொதுமக்கள் சாலை மறியல்
பல்லடம்; பல்லடம் அடுத்த கரைப்புதுார், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிகளின் எல்லைப் பகுதியான, கரைப்புதுார் - உப்பிலிபாளையம் செல்லும் ரோட்டில், நீர் ஓடை செல்கிறது.இந்த ஓடையில், விதிமுறை மீறி கழிவுகள், குப்பைகள் அதிக அளவில் கொட்டப்பட்டு வருகின்றன. நேற்றுமுன்தினம், இறைச்சி கழிவுகள் கொட்டப் பட்டதை கண்டித்து, அருகிலுள்ள சாய் குரு கார்டன் பகுதியில் உள்ள பொதுமக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.பொதுமக்கள் கூறுகையில், 'நீரோடை, சமீபத்தில் பொதுமக்களின் முயற்சி யுடன் துார்வாரப்பட்டது. இருப்பினும், இப்பகுதியில் அடிக்கடி குப்பைகள், கழிவுகள் கொட்டப்படுவது தொடர்பாக நடந்து வருகிறது. ஓடை மாசடைவதுடன், கடும் துர்நாற்றம் ஏற்படுகிறது.ஓடையில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க ஊராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. கழிவுகள் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.போலீசார் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, கழிவுகள் கொட்டியவர்கள் எச்சரித்து அனுப்பிவைக்கப்பட்டனர்.