சுத்திகரிப்பு மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
பல்லடம்; பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் சேகரமாகும் கழிவுநீரை சுத்திகரித்து பயன்படுத்த நகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக, நகரப் பகுதிகளில் கழிவுநீரை சுத்திகரிப்பதற்கான கட்டமைப்புகள் அமைத்து, வடுகபாளையம் புதுார் ஊராட்சியில் அமைக்கப்படும் சுத்திகரிப்பு மையத்துக்கு எடுத்துச் செல்லவும் நகராட்சி திட்டமிட்டுள்ளது. சமீபத்தில், இதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில், மண் மாதிரி சேகரிக்கச் சென்ற நகராட்சி அதிகாரிகளை, வடுகபாளையம் புதுார் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், திரும்பிச் சென்றனர். நேற்று சுத்திகரிப்பு மையம் அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் மேற்கொள்ள வேண்டி நகராட்சி அதிகாரிகள் வந்தனர். தகவல் அறிந்த பொதுமக்கள், சம்பவ இடத்தை முற்றுகையிட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு இருந்த நிலையில், போலீஸ் பாதுகாப்புடன், சுத்திகரிப்பு மையம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் துவங்கின. முற்றுகையிட்ட பொதுமக்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், போலீசார் கைது நடவடிக்கைக்கு ஆயத்தமாகினர். கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து எதிர்கொள்கிறோம் என்று கூறி பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.