உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குளம் ஆன புக்குளிபாளையம் ரோடு

குளம் ஆன புக்குளிபாளையம் ரோடு

திருப்பூர்; பல்லடம் ரோட்டில் இருந்து, புக்குளிபாளையம் செல்லும் ரோடு முழுவதும் சேதமாகி, மழைநீர் குளம் போல் தேங்கி நிற்பதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் ஒன்றியம், மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டது புக்குளிபாளையம். மங்கலம் மற்றும் வேட்டுவபாளையம் இடையே அமைந்துள்ள கிராமத்துக்கு, பல்வேறு வழித்தடங்கள் உள்ளன. குறிப்பாக, பல்லடம் ரோட்டில் இருந்து வரும் ரோடு வேட்டுவபாளையம் வரை செல்வதால், அதையே மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். மங்கலம் - பல்லடம் ரோட்டில் இருந்து, புக்குளிபாளையம் செல்லும் ரோடு முழுவதும் சேதமாகி, நான்கு ஆண்டுகளாகிறது. இதுவரை எவ்வித பராமரிப்பு பணியும் நடக்கவில்லை. பல இடங்களில், தார்ரோடு இருந்ததற்கான அறிகுறியே இல்லாத அளவுக்கு ரோடு மண்பாதையாக மாறிப்போயுள்ளது. குண்டும், குழியுமாக மறியுள்ளதால், சிறிய மழை பெய்தாலும் மழைநீர் குளம்போல் தேங்கி விடுகிறது. மழைநீர் வடிய வசதியில்லாததால், நீண்ட நாட்களுக்கு அப்படியே குளம் போல் நிற்கிறது. இதனால், அவ்வழியாக செல்ல முடியாத அளவுக்கு, போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. சில நாட்கள் முன் பெய்த மழைக்கு தேங்கிய தண்ணீர், ரோட்டிலேயே தேங்கியுள்ளதால், டூ வீலர்கள் சென்றுவர முடியாத நிலை உள்ளது. எனவே, ஊராட்சி நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்தி, பொதுமக்களின் போக்குவரத்தை சீரமைக்க வேண்டும். போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, மழைநீர் தேங்காதபடி மண் கொட்டி சமன்செய்ய வேண்டும் ; விரைவாக, வடிகால் வசதியுடன் கூடிய தார்ரோடு அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !