மழைக்கு பிறகும் வறண்டு காணப்படும் புக்குளம் தடுப்பணை
உடுமலை ; மழை நீர் ஓடை மற்றும் நீர்வழித்தடம் முறையாக பராமரிக்கப்படாததால், புக்குளம் கிராமத்திலுள்ள தடுப்பணை தொடர் மழைக்கு பிறகும் வறண்டு காணப்படுகிறது.குடிமங்கலம் ஒன்றியம், புக்குளம் சுற்றுப்பகுதிகளில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. இப்பகுதியின் நிலத்தடி நீர் மட்டத்துக்கு ஆதாரமாக மழை நீர் ஓடைகளும், அதன் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணைகளும் உள்ளன.சமீபத்தில், இப்பகுதியில் தொடர் மழை பெய்து கிராமத்தின் மேற்குப்பகுதியிலுள்ள ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.ஆனால், சுண்டக்கம்பாளையம் செல்லும் வழித்தடத்திலுள்ள, ஓடையின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.கிராம குடியிருப்புகளில் இருந்தும், விளைநிலங்களில் இருந்தும் வெளியேறும் மழை நீர் ஓடை வழியாக தடுப்பணைக்கு செல்லும். இந்த நீர் வழித்தடங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் பல இடங்களில் மண் மேடாக மாறி விட்டது.இதனால், தொடர் மழை பெய்தும், தடுப்பணைக்கு மழை நீர் வரவில்லை. அப்பகுதி முழுவதும் புதர் மண்டி பரிதாப நிலையில் உள்ளது.விவசாயிகள் கூறுகையில், 'பருவமழைக்கு முன் தடுப்பணை மற்றும் மழை நீர் ஓடைகளை துார்வாரியிருந்தால், நிலத்தடி நீர்மட்டம் உயர உதவியாக இருந்திருக்கும். இனியாவது தடுப்பணை மற்றும் நீர் வழித்தடங்களை துார்வாரி பராமரிக்க வேண்டும்,' என்றனர்.