உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பின்னலாடைகள் கொள்முதல்; காதர்பேட்டையில் சுறுசுறுப்பு

பின்னலாடைகள் கொள்முதல்; காதர்பேட்டையில் சுறுசுறுப்பு

காதர்பேட்டையில், பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை, அனைவருக்கும் தேவையான பின்னலாடைகள் விற்கப்படுகின்றன.தீபாவளி விற்பனைக்கு தயாராகும் வகையில், காதர்பேட்டை கடைகளில், பின்னலாடைகளை மொத்தமாக கொள்முதல் செய்வது அதிகரித்துள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்தனர். சந்தைகளில், கடை அமைத்து விற்பனை செய்வதற்காக, மொத்த வியாபாரிகள் திருப்பூர் வந்து கொள்முதல் செய்கின்றனர்.ஒவ்வொரு கடையிலும், அனைத்து வயதினருக்கும் ஏற்ப, சிறுவர் - சிறுமியர், ஆண்கள்- பெண்கள், இளைஞர்கள், முதியோர்களுக்கான ஆடைகள், வயது வாரியாக குவிந்துள்ளன. ஆயத்த ஆடை குறைவாகவும், பின்னலாடைகள் அதிகமாகவும் உள்ளன.வடமாநிலங்களில், 'பாலியஸ்டர் பேப்ரிக்' கொண்டு, பின்னலாடை தயாரிப்பதால், திருப்பூரில் இருந்து வடமாநிலம் செல்லும் ஆடைகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இருப்பினும், பருத்தி பின்னலாடைகளுக்காக, திருப்பூர் வருவதும் குறையவில்லை.நாடு முழுவதும் தீபாவளி விற்பனைக்காக, மொத்த வியாபாரிகள், காதர்பேட்டைக்கு வந்து ஆர்டர் எடுத்துச்சென்றுள்ளனர். சரக்குகள், ரயில்கள் மூலம் வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.பண்டிகைக்கால கடைகள்திருப்பூரில் ஆடைகளை கொள்முதல் செய்து, பண்டிகை கால கடைகள், ரோட்டோரமாக அமைக்கப்படுகின்றன; இதன் மூலம், சில்லரை விற்பனை மேம்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதிய ரோட்டோரக் கடைகள், ஞாயிறு தோறும் அமைக்கப்படுகின்றன. வரும், 25ம் தேதி முதல், பண்டிகை வரை தினமும் கடை நடத்தும் அளவுக்கு, ரோட்டோர வியாபாரிகளும், சரக்கு கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.'வங்கதேச ஆடை வரத்துகுறைந்தால் நல்லது'காதர்பேட்டை செகன்ட்ஸ் பனியன் வியாபாரிகள் சங்கத்தினர் கூறுகையில், ''காதர்பேட்டை வியாபாரம், கடந்த வாரத்தை காட்டிலும், இந்தவாரம் பரவாயில்லை. தீபாவளிக்கு வடமாநில ஆர்டர்கள் குறைந்துவிட்டன. சூரத், ஆமதாபாத், லுாதியானா பகுதிகளில் இருந்தும், சந்தைகளுக்கு ஆடைகள் வருவதால், வடமாநிலத்தில் இருந்து திருப்பூருக்கு வரும் ஆர்டர் குறைந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்ட மொத்த வியாபாரிகள், வழக்கம் போல் கொள்முதல் செய்கின்றனர். வங்கதேசத்தில் ஏற்பட்ட குழப்பத்தால், 5 முதல் 10 சதவீதம் அளவுக்கு, அந்நாட்டில் இருந்து ஆடைகள் வரத்து குறைந்துள்ளது. அது அப்படியே குறைந்தால், உள்நாட்டு வர்த்தகம் சீராக நடக்கும். வங்கதேச ஆடைகளுடன் நாம் போட்டியிட முடியாது. ஆட்சியாளர்கள், சிறப்பு கவனம் செலுத்தி கட்டுப்படுத்த வேண்டும். எதிர்பார்த்த அளவு பெரிய அளவு பரபப்பு இல்லை என்றாலும், தீபாவளி பண்டிகை விற்பனை பரவாயில்லை. இனிமேல், வரும் 27 ம் தேதி வரை, மொத்த வியாபாரம் பரபரப்பாக இருக்கும்'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி