உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பட்டுக்கூடு கொள்முதல்; தொகை வழங்க கோரிக்கை

பட்டுக்கூடு கொள்முதல்; தொகை வழங்க கோரிக்கை

உடுமலை; விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் பட்டுக்கூடுகளுக்கு உரிய தொகையை வழங்கவும், முறைகேடுகளை தடுக்கவும் வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.தமிழ்நாடு பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நல சங்க, மாநில தலைவர் செல்வராஜ், செயலாளர் பொன்னுச்சாமி, பொருளாளர் கனகராஜ், ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் ஆகியோர் கூறியதாவது:பட்டு நுால் உற்பத்தி ஆலைகள், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் பட்டுக்கூடுகளுக்கு உரிய தொகை வழங்காமல், ஒரு ஆண்டுக்கும் மேல் ஏமாற்றி வருகின்றன. அதிலும், உடுமலை பகுதியிலுள்ள தனியார் பட்டு நுாற்பாலை நிர்வாகம், ஒரு ஆண்டாக, 40 லட்சம் ரூபாய் வரை விவசாயிகளுக்கு வழங்காமல் ஏமாற்றி வருகிறது.அதே போல், விவசாயிகளிடம் வாங்கும் பட்டுக்கூடுகளுக்கு, கொடுக்கும் ரசீதுகளில், 'ஹேண்ட்லிங் சார்ஜஸ்' என்ற பெயரில் ,அரசு அங்காடிகளில் 'லெவி' பிடிப்பது போல் பிடித்து, அரசுக்கு கட்டி விடுவோம் என விவசாயிகளிடம் கூறி, 0.75 சதவீதம் தொகை பிடித்தம் செய்துள்ளனர்.இத்தொகையை பட்டு வளர்ச்சித்துறைக்கு கட்டாமல், அரசையும், விவசாயிகளையும் ஏமாற்றி வருகின்றனர். எனவே, பட்டு நுாற்பாலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை பெற்றுத்தரவும், அரசுக்கு லெவி தொகை செலுத்தாமல் முறைகேடு செய்த நுாற்பாலை மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது குறித்து பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை