உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தினமலர் பட்டம் இதழ் சார்பில் வினாடி-வினா: ராஜலட்சுமி கெங்குசாமி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அசத்தல்

தினமலர் பட்டம் இதழ் சார்பில் வினாடி-வினா: ராஜலட்சுமி கெங்குசாமி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அசத்தல்

உடுமலை: 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் சார்பில், 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி - வினா போட்டி பெதப்பம்பட்டி ராஜலட்சுமி கெங்குசாமி மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாணவர்களின் கற்றல் ஆர்வத்தையும், நுண்ணறிவுத்திறனை ஊக்குவித்து, படிப்பின் மீதான ஆர்வத்தை விரிவுப்படுத்துவதற்காக, 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில் மெகா வினாடி - வினா போட்டிகள் ஆண்டு தோறும் நடத்தப்படுகின்றன. நடப்பாண்டு போட்டியானது, 'தினமலர்' நாளிதழின், 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் இணைந்து நடத்தும் வினாடி - வினா போட்டிக்கு, 'சத்யா ஏஜென்சிஸ்' மற்றும் 'ஸ்போர்ட்ஸ் லேண்ட்' நிறுவனங்கள், 'கிப்ட் ஸ்பான்சர்'களாக இணைந்துள்ளன. இப்போட்டியில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து, 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்கின்றனர். பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் அணிகள், அரையிறுதிக்கு தகுதி பெறுவர். அவர்களில் இருந்து தேர்வாகும் எட்டு அணியினர், இறுதிப்போட்டியில் பங்கேற்பர். இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. இதன் ஒரு பகுதியாக, பெதப்பம்பட்டி ராஜலட்சுமி கெங்குசாமி மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில் வினாடி - வினா போட்டி நடந்தது. தகுதிச்சுற்றில், 100 மாணவர்கள் பங்கேற்றனர். அதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 மாணவ, மாணவியர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு பள்ளியளவில் இறுதிப்போட்டியில் பங்கேற்றனர். மூன்று சுற்றுகளாக நடந்த விறுவிறுப்பான இறுதி போட்டியில், 'ஈ' அணி முதல் பரிசை வென்றது. அந்த அணியில் இடம் பெற்ற ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் பிரவீன்குமார், அகிலேஷ் ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். அவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், பள்ளி முதல்வர் லட்சுமி, ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்வரி, ஆசிரியர்கள் ரம்யா, தாமோதரன் ஆகியோர், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். சிந்தனையை செம்மைப்படுத்துகிறது பள்ளி முதல்வர் லட்சுமி கூறுகையில், ''எங்களது பள்ளியில், மாணவர்கள் 'தினமலர் பட்டம்' நாளிதழை ஆர்வத்துடன் படித்து வருகின்றனர். இந்த நாளிதழ் குழந்தைகளின் அறிவை விரிவுபடுத்தி, படைப்பாற்றலை வளர்க்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளது. கல்வியுடன் சேர்த்து நல்ல பண்புகளையும், அறம் சார்ந்த கதைகளையும், வழங்கும் பட்டம் நாளிதழ் மாணவர்களின் சிந்தனையை செம்மைப்படுத்துகிறது. புதிய தகவல்கள், சுவாரசியமான புதிர்கள், அறிவியல் செய்திகள், சிறுவர் கதைகள் ஆகியவை மாணவர்கள் மிகவும் பிடித்தவையாக உள்ளது. மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்காக இப்படியான கல்வி சார்ந்த நாளிதழ்கள் அவசியம். பட்டம் நாளிதழ் குழந்தைகளின் நம்பிக்கையையும், அறிவையும் வளர்க்கும் ஒரு 'நல்ல நண்பன்' என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறேன்,'' என்றார்.

தனித்திறமையை வெளிக்கொணர்கிறது

மாணவன், அகிலேஷ்: தினமலர் என்றாலே பொது அறிவு, ஆன்மிகம் என்ற மனப்பான்மை எழுகிறது. மாணவர்கள் எதிர்காலத்தில் போட்டித்தேர்வுகளில் பங்கு பெறவும், அதனை நல்வழிப்படுத்தவும், பயனுள்ளதாக பட்டம் இதழ் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. பட்டம் இதழில், செய்தி கார்னர், வியத்தகு வேதியல், காலக்கண்ணாடி, பேசும் பசுமை, ரிலாக்ஸ் ப்ளீஸ், பேசும் படம் உள்ளிட்ட பகுதிகள் பயனுள்ளதாக உள்ளது. மாணவன் பிரவீன்குமார்: அன்றாட செய்திகள் மிக தெளிவாகவும், அனைவரும் தெரிந்து கொள்ளும்படி தினமலர் நாளிதழில் வெளியாகிறது. போக்குவரத்து கூட இல்லாத மலைக்கிராமங்கள் குறித்த செய்திகள் வெளியிடுவது போற்றுதலுக்கு உரியதாகும். பட்டம் அனைத்து மாணவர்களின் வாசிப்பு திறனை ஊக்குவிக்கிறது. இதழில் வெளிவரும் படங்கள், மாணவர்களின் ஓவியத்திறனுக்கும் விருந்தாக அமைகிறது. பேட்டிகள் வெளியாவது மாணவர்களுக்கு ஊக்கமளிக்கிறது. ஒவ்வொரு மாணவனின் தனித்திறமையை வெளிக்கொணர்வதில் பட்டம் தனித்தன்மை பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி