உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரயில்வே ஸ்டேஷன் கட்டுமான பணியில் வந்தே பாரத் வேகம் வேண்டும்! விரைவில் பணி முடிக்க ரயில் பயணிகள் எதிர்பார்ப்பு

ரயில்வே ஸ்டேஷன் கட்டுமான பணியில் வந்தே பாரத் வேகம் வேண்டும்! விரைவில் பணி முடிக்க ரயில் பயணிகள் எதிர்பார்ப்பு

நாட்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலாவணியை அள்ளித்தரும் திருப்பூரில் உட்கட்டமைப்பு வசதி என்று பார்த்தால், இன்னும் தன்னிறைவு அடையவில்லை என்றே சொல்ல வேண்டும். அந்தளவுக்கு சாலை, பாலங்கள், தெருவிளக்கு, சாக்கடை கால்வாய் உள் ளிட்ட அடிப்படை வசதிகள் இன்னும் முழுமை அடையவில்லை.அவ்வகையில், நகரின் மத்தியில் அமைந்துள்ள ரயில்வே ஸ்டேஷன் திருப்பூரின் வளர்ச்சிக்கேற்றவாறு விரிவாக்கம் செய்யப்படவில்லை. இருப்பினும் கட்டமைப்பு மற்றும் மாற்றப்பட்டு வருகிறது.ரயில்வே ஸ்டேஷனில், 'அம்ரூத் பாரத்' திட்டத்தின் கீழ் கட்டுமான பணி, 2023 ஆகஸ்டில் துவங்கியது. 22 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, முதல் பிளாட்பார்ம், டிக்கெட் முன்பதிவு மையம், முகப்பு பகுதியை மாற்றும் பணி முதலில் துவங்கப்பட்டது. ஒட்டு மொத்த கட்டடத்தை இடித்து விட்டு மீண்டும் கட்டும் பணி என்பதால், முகப்பு பகுதி பணி ஜவ்வாக இழுத்து வருகிறது.வாகனங்கள் நிறுத்துமிடம் பெரும் நெருக்கடியாக இருப்பதால், குமரன் நினைவிடம் அருகே டூவீலர் ஸ்டாண்ட் கட்டும் பணி, 2வது பிளாட்பார்ம் நுழைவு வாயில் மாற்றி அமைப்பது, ரயில்வே குடியிருப்பு அருகே காலியாக உள்ள இடத்தை வாகன நிறுத்துமிடமாக மாற்றுவது உள்ளிட்ட பணிகள் அவ்வாண்டு இறுதியில் துவங்கப்பட்டது.கடந்த 2023 ஆக., மாதம் துவங்கிய பணி, ஐந்து மாதங்களில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், கடந்த 2024 ஜன., 8ம் தேதி தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்., சிங் திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் இரண்டு மணி நேரம் ஆய்வு நடத்தி பணிகளின் வேகம் போதியதாக இல்லை.இப்படியிருந்தால், எப்போது பணியை முடிக்க போகிறீர்கள்? என அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களை கடிந்து கொண்டார். அதன்பின், 2வது பிளாட்பார்ம் மற்றும் ரயில்வே ஸ்டேஷன் மேற்கு பகுதியில் பணிகள், கூடுதலாக ஒரு 'எஸ்கலேட்டர்' செயல்பாட்டுக்கு கொண்டு வரும் பணி வேகமாகியது.

தாமதத்துக்குஎன்ன காரணம்

தினமும், 5,000 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் வந்து செல்லும் நிலையில் நுழைவு வாயில், பயணிகள் உள்ளே வருவது, வெளியேறுவது பெரும் பிரச்னையாக உள்ளதால், கூடுதலாக மூன்று இடங்களில் நுழைவு வாயில் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.ஆனால், துவங்கிய பணிகளை முடித்து விட்டு, அடுத்த கட்ட பணிகளை துவங்கிக் கொள்ளலாம் என உயரதிகாரிகள் தெரிவித்ததையடுத்து, பாதியில் நிற்கும் பணிகளை முடிப்பதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. பயணிகள் எண்ணிக்கை ஏற்ப, பிளாட்பார்ம் அகலப்படுத்துவது, விரிவான வசதி செய்வது தான் அம்ரூத் பாரத் திட்ட நோக்கம்.தற்போதுள்ள ஸ்டேஷன் மாஸ்டர் அறை, வணிகப்பிரிவு அலுவலகம், பழைய புக்கிங் ஆபீஸ், முன்பதிவில்லா டிக்கெட் வழங்குமிடம், தகவல் மையம், உள்ளிட்டவற்றை ஒரே நேரத்தில் இடித்து விட்டு பிளாட்பார்ம் விரிவுபடுத்த முடியாது; பயணிகள் பாதிக்கப்படுவர்.எனவே, மேற்கண்ட பணிக்கு வேறு அலுவலகம் கட்டி ஒதுக்கப்பட்ட பின், பிளாட்பார்ம் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. எனவே, பணிகள் தாமதமாகி வருகிறது. அதேநேரம், முதல்கட்டமாக பணிகள் முடிந்த பகுதியை மட்டும் திறப்பு விழா செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, புதியதாக கட்டப்பட்ட நுழைவு வாயில் வளைவு, டூவீலர் ஸ்டாண்ட் திறப்பு விழாவுக்கு தயார்படுத்தப்பட்டு வருகிறது.ரயில்வே ஸ்டேஷனில் முழுதும் சேர்த்து, 50 சதவீத பணிகளே முடிந்துள்ளது. பணி துவங்கி இரண்டரை ஆண்டுகளாகிறது. பணிகளை முழுமையாக முடித்து எப்போது, புதிய ரயில்வே ஸ்டேஷன் வளாகம் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் மேலாளர் ராஜேஷ் கூறுகையில், 'அம்ரூத் பாரத்' திட்ட பணி குறித்து தொடர்ச்சியாக, ரயில்வே உயரதிகாரிகள் குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். சமீபத்தில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்தி, ஏப்., 31ம் தேதிக்குள், 80 சதவீத பணிகளை முடித்து, அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.முதல்கட்டமாக, டிக்கெட் முன்பதிவு மையம், ரயில்வே ஸ்டேஷன் முகப்பு பகுதி நுழைவு வாயில், முன்பதிவில்லா டிக்கெட் கவுன்டர் அறை, தகவல் மையம் திறப்பதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகிறது,' என்றனர்.கடந்த 2024 ஜன., 8ம் தேதி தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்., சிங் திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் இரண்டு மணி நேரம் ஆய்வு நடத்தி பணிகளின் வேகம் போதியதாக இல்லை. இப்படியிருந்தால், எப்போது பணியை முடிக்க போகிறீர்கள்? என அதிகாரிகள்,ஒப்பந்ததாரர்களை கடிந்து கொண்டார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !