தத்தனுாரில் தட்டியெடுத்த மழை தடுப்பணை - குட்டைகள் நிரம்பின
அவிநாசி: அவிநாசி வட்டம் தத்தனுார் ஊராட்சிக்குட்பட்ட பாப்பநாயக்கன்பாளையம் வெள்ளமடை, சுள்ளிபாளையம், ஆலங்கல்பாளையம், கூட்டப்பள்ளி பிரிவு, புது சந்தை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது.இதனால் தத்தனூர் ஊராட்சியில் கட்டப்பட்ட தடுப்பணைகளில் தண்ணீர் நிரம்பி வழிந்தோடியது.பல இடங்களில் ஆர்ப்பரித்துச் சென்ற மழை வெள்ளத்தால் மண் அரிப்பு ஏற்பட்டு பக்கவாட்டில் இருந்த தோட்டத்துப் பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது.அதில் கடந்த 1991--92ம் ஆண்டு வெள்ளமடையில் கட்டப்பட்ட தடுப்பணை முழுவதுமாக நிரம்பி தண்ணீர் மிதமாக வெளியேறி வருகிறது. மேலும் தடுப்பணையில் கீழ்ப்பகுதியில் கசிவு ஏற்பட்டுள்ளது.நேற்று மதியம் திடீரென சூழ்ந்த கருமேக கூட்டங்களால் புளிப்பார். தத்தனூர்,போத்தம்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. பல பகுதிகளில் தரைமட்ட பாலங்களில் மழை வெள்ளம் ஆர்ப்பரித்து சென்றது.சேவூர் அருகே போத்தம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட குட்டகம் ரோட்டில் தண்ணீர் பந்தல்பாளையம் பகுதியில் உள்ள தரைமட்ட பாலத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை வெள்ளம் சென்றதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.மழை வெள்ள காலங்களில், தரைப் பாலத்தை கடக்க முடியாமல் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும், அவசர கால தேவைக்காக செல்வதற்கு கூட வழியில்லாமல் தவிப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.தண்ணீர்ப்பந்தல்பாளையம் பகுதியில் உள்ள தரைப்பாலத்தை உயர்த்தி கட்டித்தர பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துள்ளதாக கூறுகின்றனர்.தடுப்பணைகள் - குட்டைகள் ஆகியவை நிரம்பி தண்ணீர் வெளியேறி வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.