மானாவாரிக்கு உதவும் மழை; மகிழ்ச்சியில் விவசாயிகள்
உடுமலை : மானாவாரி சாகுபடி செழிக்கும் வகையில், தொடர் மழை பெய்வதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.திருப்பூர் மாவட்டம் உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில் விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக, கால்நடை வளர்ப்பும் நடக்கிறது.அவ்வகையில், உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், பருவமழையை ஆதாரமாகக்கொண்டு, பல ஆயிரம் ஏக்கரில், மானாவாரி சாகுபடி மேற்கொள்கின்றனர். குறிப்பாக, வடகிழக்கு பருவமழை சீசனில், கொண்டைக்கடலை, கொத்தமல்லி, சோளம் விதைப்பு செய்வர்.இச்சாகுபடியில், போதிய விலை கிடைக்காதது, மழைப்பொழிவு குறைவு உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு வந்தது.இதனால், நடப்பாண்டு பெரும்பாலான விவசாயிகள், கொண்டைக்கடலை சாகுபடியை கைவிட்டு, மக்காச்சோள சாகுபடிக்கு மாறி, விதைப்பு செய்தனர்.இந்நிலையில், கடந்த சில நாட்களாக, மானாவாரி சாகுபடிக்கு உதவும் வகையில், தொடர் மழை பெய்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இம்மழை தொடர வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.